பக்கம்:அகமும் புறமும்.pdf/367

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

360 • அகமும் புறமும்

யால் அவன் எதிர்பாராவிதமாகக் ‘கடலுக்கு இரையாகி விட்டான்’ என்பதும் தெரிகிறது. மிகவும் இளமையிலேயே அவன் இறந்து விட்டாலும், தமிழ் மொழி உள்ள அளவும் இறவாத சிறப்புடைய ஒரு பாடலை நமக்குத் தந்துவிட்டான். அந்தப் பாடலிலேதான் இந்தப் பழைய வினாவை எழுப்பி, அதற்கு விடையும் அவனே கூறுகிறான்.

“இவ்வுலகம் இருக்கிறது. (யாரால் எனில்) இந்திரனுக்கே உரிமையான அமிர்தம் கிடைப்பதாயினும், அதை இனிது என்று கொண்டு (பிறருக்குத் தாராமல்) தனித்து உண்ணமாட்டார்; யாரோடும் வெறுப்புக்கொள்ளமாட்டார்; பிறர் கண்டு அஞ்சுகிற துன்பத்தைக் கண்டு தாமும் அதற்கு அஞ்சி அத்துன்பம் தீருகிற வரையில் முயற்சி இல்லாமல்) மடியுடன் (சோம்பலுடன்) இருக்கமாட்டார்; புகழ் கிடைப்பதாயின், தம் உயிரையும் கொடுப்பார்; பழி வருவதானால் உலகு முழுவதும் கிடைப்பதாயினும் கொள்ளமாட்டார்; அத்தகைய மாட்சிமைப்பட்ட பண்பாட்டை உடையவராகித் தமக்கு என்று (தன்னல) முயற்சியில் ஈடுபடாதவர், பிறர் பொருட்டே முயற்சி செய்பவர். இவ்வுலகத்தில் இருத்தலான் (இவ்வுலகம் இருக்கிறது)” என்ற பொருள்பட அப்பெருமகன் பாடுகிறான்.

உண்டால் அம்ம! இவ் வுலகம்
இந்திரர் அமிழ்தம் இயைவது ஆயினும் இனிதுஎனத்
தமியர் உண்டலும் இவரே; முனிவிலர்;
துஞ்சலும் இலர் பிறர் அஞ்சுவது அஞ்சீப்
புகழ்எனின் உயிரும் கொடுக்குவர்; பழிஎனின்
உலகுடன் பெறினும் கொள்ளலர்; அயர்வுஇலர்;
அன்ன மாட்சி அனையர் ஆகித்
தமக்குஎன முயலா நோன்தாள்
பிறர்க்குஎன முயலுநர் உண்மை யானே.

                                                          
(புறம்-182)