பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/29

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

தமிழ் நாட்டில் பல நண்பர்களைப் பெற்றுத் தந்தன; சோவியத் யூனியனையும் அதன் சாதனைகளையும் தெரிந்து கொள்ளவும் புரிந்து கொள்ளவும் தமிழ் மக்கள் பலரிடையே பேரார்வத்தையும் அவை எழுப்பின. அவர் ஐம்பதாம் ஆண்டுகளில், தமது அந்திம காலத்தில் எழுதிய ‘அருளும் பொருளும்’ என்ற நூலிலும்கூட, பாரத நாட்டு உன்னத புருஷர்கரும் கவிஞர்களும் மிகவுயர்வாகப் போற்றி வந்த ஆன்மிக மதிப்புக்களையெல்லாம், மார்க்சிய-லெனினியக் கொள்கைகளின் மூலம் சமுதாயத்தை நல்ல விதமாக மேம்படுத்தி மாற்றியமைத்து, மனிதனின் லோகாயத் தேவைகள் அனைத்தையும் வாழ்வில் உத்தரவாதம் செய்யும் காலத்தில்தான் எதார்த்த வாழ்வில் எய்த முடியும் என்ற முடிவுக்கே அவர் வந்திருந்தார். பாரத நாட்டின் கலாசார, ஆன்மிக மதிப்புக்களுக்கும், சோஷலிசத்தின் அரசியல், பொருளாதாரக் கோட்பாடுகளுக்கும் இடையே ஓர் ஒருங்கிணைப்பைக் கொண்டுவரும் வேட்கையையும் இந்நூல் புலப்படுத்துகிறது.


4
எம். சிங்காரவேலு செட்டியார்

திரு. வி. க. வோடு அவரது தொழிற்சங்க நடவடிக்கைகளில் நெருங்கிய தோழராக இருந்தவரும், தமிழ் நாட்டில் தொழிலாளி வர்க்க இயக்கத்தின், தொழிற்சங்க இயக்கத்தின் ஆரம்பகால முன்னோடிகளில் ஒருவருமான காலஞ்சென்ற எம். சிங்காரவேலு செட்டியாரும், அக்டோபர் புரட்சின் செய்தியையும், விஞ்ஞான சோஷலிசக் கருத்துக்களையும் பரப்பவும், சென்னையில் ஒரு கம்யூனிஸ்டுகள் கோஷ்டியை உருவாக்கவும் முதன்முதலில் பாடுபட்டவர் களில் ஒருவராவார்.

28