பக்கம்:அக்டோபர் புரட்சியும் தமிழ் இலக்கியமும்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

வீணில்லை வேலையற்றோரில்லை தனி உடைமை
வெம்பூத ஆட்சியில்லை
வீழ்வில்லை ரஷ்யாவில் மேலில்லை கீழில்லை
வெற்றி எல்லோர்க்கும் எல்லை

அக்டோபர் புரட்சியைப்பற்றி, உணர்ச்சியூட்டும் வழிநடைச் சந்த கதியும் வாக்குவன்மையும் மிக்க பாடலொன்றை அவர் 1936ல் எழுதினார். அந்தப் பாடலில் அவர் இவ்வாறு பாடினார்;

சடசட வென்றே முறிந்து ஜார் விழுந்த காரணம்
தரணியெங்கும் பொதுவுடைமை தழைப்பதற் குதாரணம்
படபடத்துத் துடிதுடித்துப் பாமரர் முன்னோர்
பணம் சுமந்த ராட்சதர்கள் பதறி நொந்து சாகிறார்
வசியமிக்க மார்க்சின் கொள்கை மாநிலத்தில் பலிக்குதே
மகிழும் ரஷ்யா லெனின் படைத்த வாழ்வினால் ஜொலிக்குதே
பசியெழுப்பும் புரட்சி வெந்தீ பார் முழுதும் எரியுதே
படையை ஏவி விடும் ஏகாதிபத்ய வாழ்வு சரியுதே!

ஜீவா தமது பாடல்களைத் தவிர, தமிழ்நாட்டு இந்தியக் கம்யூனிஸ்டுக் கட்சியின் பத்திரிகையான ஜனசக்தியிலும், மற்றும் 1958ல் அவர் தொடங்கி, 1962 தொடக்கத்தில் அவர் காலமாகும் வரையில் அவரே ஆசிரியராகவும் இருந்து வந்த கலை இலக்கிய மாத இதழான தாமரையிலும், அக்டோபர் புரட்சியைப் பற்றியும், சோவியத் ஆட்சிக் காலத்தில் மலர்ந்துள்ள இலக்கியங்களைப் பற்றியும் பல கட்டுரைகளையும் எழுதினார். சோவியத் எழுத்தாளர்களையும் இந்திய இலக்கியங்களையும் பற்றி அவர் எழுதிய இலக்கிய விமர்சனக் கட்டுரைகள் பலவும், படைப்பிலக்கியம் சம்பந்தமாகப் பல இளம் தமிழ் எழுத்தாளர்கள் தமது கண்ணோட்டத்தையும் அணுகல் முறையையும் உருவாக்கிக் கொள்ளவும் நம்பிக்கையூட்டும் பல தமிழ் எழுத்தாளர்களை உருவாக்கவும் உதவின என்றும் கூறலாம். அவர் தொடக்கி வைத்த மரபைத் தாமரை இன்றும் தொடர்ந்து பின்பற்றி வருகிறது.

37