பக்கம்:அங்கும் இங்கும்.pdf/47

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
7. பேச்சுரிமையில் பெருமிதம்

இலண்டன் மாநகரம், உலகப் பெருநகரங்களில் ஒன்று. பிரிட்டிஷ் பேரரசின் தலைநகரம் அது. வரலாற்றுச் சிறப்புடைய ஒன்று அது. பாராளுமன்றங்களின் தாயாக விளங்கும் பிரிட்டிஷ் பாராளுமன்றம் அமைந்திருப்பது அங்கேதான். உலக வாணிக மையங்களில் ஒன்று இலண்டன். அதன் சிறப்புக்கள் எத்தனையோ! எத்தனையோ சிறப்புக்களுடைய இலண்டன் நகருக்கு, நான் செல்லும் வாய்ப்புக் கிடைத்தது. அங்குப் பல நாள் தங்கவும் வாய்ப்புக் கிட்டிற்று ஒரு முறை யன்று; இருமுறை.

முதன் முறை அங்குச் சென்று தங்கியது ; ஆயிரத்துத் தொள்ளாயிரத்து ஐம்பத்தொன்றில், பிரிட்டனின் கல்வி முறைகளை நேரில் கண்டு அறிந்து வருமாறு, அப்போதைய , சென்னை கல்வி அமைச்சர், கனம் மாதவமேனன், என்னை அனுப்பியிருந்தார். அந்நாட்டில், நான்கு மாதங்களிருந்து கண்டு கற்று வந்தேன். அப்போது நான் தனியே செல்லவில்லை. என் மனைவியையும் அழைத்துச் சென்றேன். அந்நியச் செலாவணி முடை இல்லாத காலம் அது. ஆகவே, மனைவியையும் அழைத்துப் போவது எளிதாக இருந்தது.

இலண்டனில் காணத் தக்கவை பல. எவை எவை என்பது, அவரவர் ஈடுபாட்டை, சார்பை, சுவையைப்