பக்கம்:அங்கும் இங்கும்.pdf/50

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

46

இப்படிப்பட்ட அடக்குமுறையை எதிர்த்துப் பல்லாண்டு, பலர், பேசிப் பேசி, அனுபவித்த சிறைத் தண்டனையாக, அடி உதையாகச் சொல்லவொண்ணாக் கொடுமைகளாகப் பெருவிலை கொடுத்து, பேச்சுரிமையைப் பெற்ற ‘குருகேஷத்திரம்’ ‘ஹைட் பார்க்கின் மூலையொன்று’

அக்காலம் முதல், அம் மூலையில், ஒரே நேரத்தில் பல பேச்சாளர்கள் பேசுவர்; விடுமுறை நாள்களில், ஒரே வேளை, பத்துப் பதினைந்து ‘கூட்டங்கள்’ அடுத்தடுத்து நடக்கும்; மற்ற நாள்களில் ஏக காலத்தில் ஐந்தாறு கூட்டங்கள் நடக்கும்.

அங்குப் பேச, யாருடைய அனுமதியும் தேவையில்லை. அங்கு, மேடை அமைக்கக் கூடாது. ஆகவே, பேச்சாளரே! அவரது தோழரோ, காலி சாதிக்காய்ப் பெட்டி ஒன்றைக் கொண்டுபோய், அங்கோர் இடத்தில் போட்டு அதன்மேல் நின்று பேசுவார். நிலத்தின் மேல் நின்றே பேசுவோர் பலர். உரிமையை நிலைநிறுத்தும் அவர்களுக்கும் மற்றொரு கட்டுப்பாடு உள்ளது.

அது என்ன ?

அங்கு யாரும் ‘மைக்’ அமைக்கக்கூடாது. ஒருவர், ஒலி பெருக்கி அமைத்துக் கொண்டு பேசினால், அருகில் நடக்கும் மற்றக் கூட்டங்களுக்கு, அது இடையூறாக இருக்கும். மற்றப் பேச்சாளர்களின் உரிமையை ஒலி பெருக்கி பறிக்கும். எனவே, அந்த இடத்தில், யாரும் ஒலி பெருக்கி வைத்துப் பேசக் கூடா தென்ற தடையுண்டு.

நானும் என் மனைவியும் இலண்டனிலிருந்தபோது, ஒரு ஞாயிற்றுக்கிழமை மாலை, பேச்சுரிமைப் புனித பூமிக்குச் சென்றோம். கூட்டங்கள் நடக்கும் வகையைக் காணவே சென்றோம்.