பக்கம்:அங்கும் இங்கும்.pdf/51

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

47

பூங்காவிற்குள் நுழைந்ததும், ஒரு சிறு கூட்டத்தைக் கண்டோம். பதினைந்து இருபது பேர்களுக்கு மேல் இல்லை அங்கு. அதில் ஒருவர், ஆர்வத்தோடு பேசிக் கொண்டிருந்தார். சிறிது நேரம் அவர் பேச்சைக் கேட்டோம். அவர் ஒரு யூதர். யூத சமயத்தைப் பற்றிப் பேசினார். தங்கள் 'கர்த்தர்' இனித் தான் வரப்போகிறார் என்றார். அவரை வரவேற்பதற்காக ஆயத்தஞ் செய்துகொள்ளச் சொன்னார். அத்தனை பேச்சுக் களையும் பதம் பார்க்க எங்களுக்கு ஆசை. ஆகவே, சில அடி துரத்தில் நடந்து கொண்டிருந்த அடுத்த கூட்டத்திற்கு நகர்ந்தோம். அங்கும் ஒருவர் ஆர்வத்தோடு பேசிக்கொண் டிருந்தார். அவர் கத்தோலிக்க கிருத்துவர். 'கர்த்தர்' ஏசுவாக, வந்ததைப் பற்றிப் பேசினார். அவரது கொள்கைகளைப் போப்பாண்டவர் விளக்கிக் கூறுவது போலவே ஏற்றுக் கொள்ளவேண்டும். அதுவே விசுவாசத்திற்கு அடையாளம் என்றும் பேசிக்கொண்டிருந்தார். அப் பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்தவர்களும் சிலரே.

அடுத்த கூட்டத்தில் பிராடெஸ்டண்ட் கிருத்துவர் ஒருவர், தம் சமயப் பிரிவின் சிறப்புக்களைப் பற்றிக் கூறிக் கொண்டிருந்தார். அவரது பேச்சைக் கேட்டுக் கொண்டிருந்த சிலரோடு நாங்களும் சேர்ந்து சிறிது கேட்டோம். மெல்ல நழுவினோம்.

சில அடி துரத்தில் வேறொருவர் பேசிக்கொண்டிருந்தார். அங்கும் முப்பது நாற்பது பேருக்குமேல் கூடவில்லை; அவர்களோடு கலந்து நாங்களும் பேச்சைக் கேட்டோம்.

சமயச் சொற்பொழிவுகளையும், சமயங்களையும் கண்டித்துக் கொண்டிருந்தார். உழைத்துப் பிழைக்க முடியாதவர்கள், ஆண்டவனைப் பற்றிப் பேசிப் பிழைக்கிறார்கள் என்று குற்றஞ்சாட்டினார் ; பெரியார் பாணியில், சமயங்களை யெல்லாம் சாடினார்.