பக்கம்:அங்கும் இங்கும்.pdf/64

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

60

காணாவண்ணம் சமாளித்துக் கொண்டேன். படகுத் துறையைச் சேர்ந்தோம். மோட்டார் படகொன்றில் ஏறி,கருங்கடலில் பல மணிநேரம் பயணஞ் செய்து திரும்பினோம். இனிய, அதிகக் குளிரில்லாத நற்காற்று எங்களை உற்சாகப்படுத்தியது

மொழிபெயர்ப்பாளரும் வழிகாட்டியும். ஏதேதோ சொல்லிக்கொண்டு வந்தார்கள். என்னுடன் வந்த இந்திய நண்பர்கள் இருவரும் அதைக் கேட்பதும், நோட்டம் பார்ப்பதும், கேள்வி கேட்பதுமாக இருந்தார்கள். பெரியவரின் கண்ணீரால் சென்னைக்குத் திருப்பப்பட்ட என் சிந்தனை,தமிழ் நாட்டிலேயே சுற்றிக் கொண்டிருந்தது.

காலஞ்சென்ற அழகப்ப செட்டியார் தமது கல்லூரிகளில் பணிபுரியும் ஆசிரியர்கள் கோடை விடுமுறையில் சென்று தங்கி மகிழ்வதற்காக, கோடைக்கானலில் பங்களா ஏற்பாடு செய்திருந்தது கண் முன்னே நின்றது. அதை ஆசிரியர்கள் பயன்படுத்தாது என் நினைவிற்கு வந்தது. நம் கல்லூரிப் பேராசிரியர்களிடம்கூட, விடுமுறைகளை ஆரோக்கிய புரிகளில் கழிக்கும் மனப்போக்கோ அதற்கான பொருள் நிலையோ இல்லையே என்று ஏங்கிற்று உள்ளம். நம் பிஞ்சுகளையாவது வறுமையின்றி, வாட்டமின்றி துள்ளி வளர வழிசெய் என்றது மனசாட்சி. பள்ளிப்பகலுணவும் சீருடையும் மின்னின. அதற்கும் குறுக்குச்சால் ஓட்டிய நல்லவர்களெல்லாரும் மின்னி நகைத்தனர்.

'அப்பா ! கவலைப்படாதீர்களப்பா ! இங்கு நல்லது செய்யவும் மாட்டார்கள் ; செய்கிறவர்களை சும்மா விடவும்மாட்டார்கள். இதற்கெல்லாம் கவலைப்படாதீர்கள். நீங்கள் செய்ய வேண்டியதைச் செய்யுங்கள் என்று, என் மறைந்த மகன் வள்ளுவன் சொன்னதும் மின்னி, உறுதியை வளர்த்தது.