பக்கம்:அங்கும் இங்கும்.pdf/95

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
15. ஒளி பரப்ப வாரீர்

கல்விக்கு ஆதரவான சூழ்நிலையைப் பொது மக்களிடம் எப்படி உருவாக்கினார்கள் ? சோவியத் ஆட்சி, மலர்த்த போது, சோவியத் மக்களில் நான்கில் மூவர், எழுதப் படிக்கத் தெரியாத, தற்குறியாக அல்லவா இருந்தார்கள் ? அத்தகைய சமுதாயத்தில் கல்விப் பசியை எப்படி ஏற்படுத்தினார்கள்? எப்படி அப்பசியை ஆற்றினார்கள் ? மேலும் மேலும் பசி எடுக்கும்படி என்ன செய்தார்கள் ? இந்த வினாக்களைக் கேட்டோம். பதில் கிடைத்தது.

‘எழுதப் படிக்கத் தெரியாதவன், அரசியல் அப்பாவி. அவன், அரசியலில் பங்குகொள்ள ஆற்றல் அற்றவன். அந்நிலையை மாற்றி, கல்வியறிவு பெற்றவனாகச் செய்தால், குடிமகன், தன் நினைவோடு, அரசியலில் உரிய பங்குகொள்ள முடியும். வேறு பல பெரும் பொறுப்புகள் இருந்தாலும், ‘எழுத்தறியாமையைப் போக்குவதில், தற்குறித்தனத்தைப் போக்குவதில் முதற் கவனம், பெருங் கவனம், விரைவான முயற்சி தேவை’, என்று லெனின் உரைத்தாராம். அதை ஆட்சியும் கட்சியும் ஏற்றுக்கொண்டன. கொள்கை அளவில் ஏற்றுக் கொண்டதோடு நிற்கவில்லை ; கொள்கையை நிறை வேற்றக் குதித்தனர். நாடு முழுவதற்கும் எழுத்தறிவிப்பு இயக்தித்திற்குத் திட்டமிட்டனர். பல தரத்தினர் ஆதரவைத் திரட்டினர்.