பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/100

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.


II. பாப்ரு சாஸனம்

இந்த லிகிதம் பிக்ஷுக்களுக்கென்று பிரத்தியேகமாக எழுதப்பட்டது. பாப்ரு என்ற ஊர் ராஜஸ்தானத்தில் ஜெய்ப்பூர் ஸம்ஸ்தானத்திலுள்ளது. பெய்ராத்துக்கு மிகவும் அருகிலுள்ளது. லிகிதம் வரைந்திருக்கும் கல் இப்போது கல்கத்தா ம்யூஸியத்தில் காப்பாற்றி வைக்கப்பட்டிருக்கிறது. பாப்ருவில் பழைய பௌத்த விஹாரம் ஒன்று இருந்து வந்தது. இச்சாஸனத்தின் காலம் எது என்னும் விஷயமாய் வித்வான்களுக்கிடையில் இன்னும் விவாதங்கள் நடந்து வருகின்றன. பொதுவான அபிப்பிராய மென்னவென்றால் இதுவும் மற்ற இரண்டு உபசாஸனங்களைப் போல அசோகனுடைய ஆதி லிகிதங்களில் ஒன்றென்றாம். இச்சாஸனத்தின் ஆரம்பம் குறிப்பிடத்தக்கது.

மகதத்து அரசன் பியதஸி, ஸங்கத்தை நமஸ்கரித்து அவர்கள் சுகமும் ஆரோக்கியமும் அடையவேண்டுமென்று விரும்பிக் கூறுவதாவது. புண்ணியவான்களே! புத்தர், தர்மம், ஸங்கம் என்பனவற்றில் எனக்குள்ள விசுவாஸ வெகுமானமும் நம்பிக்கையும் எவ்வளவு அதிகமென்று உங்களுக்குத் தெரியும். புண்ணியவான்களே! பகவான் புத்தரால் கூறப்பட்டுள்ள யாவும் மிகச் சிரேஷ்டமாகவே கூறப்பட்டிருக்கின்றன. புண்ணியவான்களே, நான் உங்களுக்கு ஒரு வாக்கியத்தைச் சுட்டிக்காட்ட அனுமதி கொடுப்பீர்களானால் அது “ஸத் தர்மம், சாசுவதமாய் நிலை நிற்கும்” என்பதே. புண்ணியவான்களே ! வேறு சில வாக்கியங்களையும் எடுத்துக்கூற விரும்புகின்றேன்.