பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/132

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது


IV. கலிங்க சாஸனங்கள்

இச்சாஸனங்கள் இரண்டும் தவுளி ஜவுகட என்ற இடங்களில் பதினான்கு சாஸனங்களின் பின் 11, 12, 13வது சாஸனங்களுக்குப் பதிலாக வரையப்பட்டிருக்கின்றன. இவை எழுதப்பட்ட காலமும் பதினான்கு சாஸனங்களின் காலமே எனலாம். தவுளி என்ற ஊர் பூரிக்கும் புவனேசுவர் என்ற பெரிய க்ஷேத்திரத்துக்கும் அருகிலுள்ளது. இங்குள்ள அசோக சாஸனங்கள் அச்வத்தாம மலை என்னும் பெயருடைய பாறையின் வடபாகத்தில் எழுதப்பட்டிருக்கின்றன. இவற்றை காப்பாற்றவோவென்று தோன்றும்படி ஒரு யானையின் பிரதிமை அப்பாறையின் மேல்புறத்தில் செதுக்கப்பட்டிருக்கிறது. ஜவுகட என்ற ஊர் நமது மாகாணத்தைச் சேர்ந்த கஞ்ஜம் ஜில்லாவில் உள்ளது. இங்கு லிகிதங்கள் உயரமான ஒரு மலையின் மேல் காணப்படுகிறது. இவ்விரு ஊர்களும் அசோகனின் காலத்தில் புதிதாகச் சேர்க்கப்பட்ட பிரதேசங்களின் அதிகாரிகள் வசித்துவந்த நகரங்களாயிருந்தன. சாஸனங்களில் இவ்வூர்களுக்குத் தொஸாலி என்றும் ஸமாபா என்றும் முறையே பெயர் கொடுக்கப்படுகிறது.

கலிங்க சாஸனங்கள் புதிதாக ஜயித்த ஜனங்களுக்கும் அவர்களின் பக்கத்திலுள்ள காட்டு ஜாதியாருக்கும் ‘பயப்படாதேயுங்கள்’ என்று அபய தானஞ்செய்யும் கட்டளைகளாம். நோக்கம் ஒன்றானதால் இரண்டு சாஸனங்களுக்கும் பொதுவாக சில வாசகங்கள் காணப்படுகின்றன. இரண்டு வாசகங்கள், (16உம் 17உம்) பதின்மூன்றாம் சாஸனத்திலும் சிறிது மாறி வந்திருக்கின்றன.

முதல் கலிங்க சாஸனத்தின் முடிவில் வேறு சாஸனம் என்று சொல்லும்படியான கட்டளையொன்று அனுபந்தமாகச் சேர்க்கப்பட்டிருக்கிறது, இதன் கருத்து இரண்டாம் சாஸனத்திலுள்ளதுபோல அதிகாரிகள் ஐந்து வருஷங்களுக்கு ஒரு முறை அல்லது மூன்று வருஷங்களுக்கு ஒரு முறை அனுஸம்யானம் செய்யவேண்டுமென்பதை வற்புறுத்தலே. அனுஸம்யானம் என்பது என்னவென்று நமக்குத் தெரிந்ததை அவதாரிகையில் கூறியிருக்கிறோம்.