அனுபந்தம் பௌத்தமறை நூல்கள்
161
தெடுக்கப்பட்ட எல்லாச் சமய நூல்களையும் ஒப்புக் கொள்ளவில்லையாயினும் பொதுவாக அவை சாக்கிய முனிவருடைய தர்மோபதேசங்களை விளக்குகின்றவையே என்பது மட்டில் ஒப்புக்கொள்ளப்பட்டது, இவ்வபிப்பிராயத்தை உறுதிப்படுத்த புராதன வஸ்து ஆராய்ச்சி அத்தாட்சியைத் தருகின்றது. கி. மு. மூன்று அல்லது இரண்டாம் நூற்றாண்டைச் சேர்ந்தனவும் பர்ஹுத் என்ற விடத்திலிருந்து அகப்பட்டுள்ளனவுமான சில கல்வெட்டு களில் 'பஞ்சநிகாயிகன்' (ஐந்து நிகாயங்களையும் கற்றுத் தேர்ந்தவன்), பேடகி (பிடகங்களைக் கற்ற வித்துவான்) என்ற பட்டங்கள் பௌத்த பிக்ஷுக்களுக்குக் கொடுக்கப்பட்டிருக்கின்றன. பிடகம் என்ற பதம் சமய நூல்களைத் தொகுப்பதற்குமுன் ஏற்பட்டிருக்க முடியாது, புத்தருடைய வாக்கியங்களை ஐந்து நிகாயங்களாக வகுத்ததும் ஆதியில் ஏற்பட்டதன்று. மூன்றாவது மகாஸபையில் மறைநூல்கள் நிச்சயிக்கப்பட்ட பின்பே இச்சொற்கள் வழக்கில் வந்திருக்க இடமுண்டு, ஆதலால், இம்மகாஸபையில் நிர்ணயிக்கப்பட்ட நூல்கள் அக்காலம் பொதுவாக ஒப்புக் கொள்ளப்பட்டவை என்பது தெளிவாகும். தென் பௌத்தமதம், வட பௌத்தமதம் என்ற வித்தியாசங்கள் அப்போது பிரபலமாகவில்லை.
மூன்று பிடகங்களில் அடங்கிய பௌத்தப் பிரபந்தங்களை வேதத்தின் ஞானகாண்டத்திற்கு ஒப்பிடலாமாயினும் அவை இரண்டிற்கும் நிரம்ப வேறுபாடுகளும் உள. ஆரண்யகங்கள் உபநிஷத்துகள் முதலிய மறைநூல்கள் வெவ்வேறு காலத்தவை; பற்பல ரிஷிகளின் மதங்கள் அடங்கியவை; பலவிதக் கொள்கைகளைப் பிரதிபாதிப்பவை. பிடகங்களில் அடங்கிய ' நூல்களோ, கௌதம புத்தர் கொள்கைகளை மட்டில் விளக்குவனவாகும்.
II