பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/3

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

முகவுரை

அசோகனது சாஸனங்கள் உலக சரித்திரத்திலேயே ஒரு புதுமை எனலாம். ஆயிரக்கணக்கான கல்வெட்டுக்களும் வேறு பலவித புராதன லிகிதங்களும் நமக்கு இப்புவியின் பல பாகங்களிலிருந்து கிடைத்திருக்கின்றன ; ஆயினும் தன் பிரஜைகளின் க்ஷேமத்தின் பொருட்டு, தர்மோபதேசங்களை எழுதிவைத்த அரசனை நாம் வேறெங்குங் கண்டிலேம். இந்த லிகிதங்கள் இந்திய சரித்திரத்தில் மிகவும் ஏற்றமுடைய தஸ்தாவேஜுகள், முதலாவது, இவற்றைவிடப் பழைமையான லிகிதங்கள் அநேகமாக இந்தியாவிற் கிடையா. இவற்றின் கருத்தை அறியும் பொருட்டுச் செய்யப்பட்ட ஆராய்ச்சிகள் இந்தியாவிற் சிலாசாஸன ஆராய்ச்சிக்குத் தொடக்கமாகும். இரண்டாவது, இவற்றிற் காணப்படும் லிபி (எழுத்து) நம் நாட்டில் தற்காலம் உபயோகப் படுத்தப்படும் பல எழுத்துக்களின் ஆதியை விளக்குகிறது. மூன்றாவது, பௌத்த மத சரித்திரத்தை விளக்க இச்சாஸனங்கள் இன்றியமையாதன, நான்காவது, இந்த லிகிதங்களிலுள்ள பாஷை கி. மு. மூன்றாவது நூற்றாண்டில் வடஇந்தியாவில் பேசப்பட்டு வந்த மொழியானது வடமொழியோடும் பிராக்ருத நடைகளோடும் எவ்வித ஒற்றுமை வேற்றுமைகளை உடையனவாயிருந்தன என்பதை விளக்கும். இலக்கியமாகக் கருதுமிடத்தும் அசோக சாஸனங்கள் மிகச் சிரேஷ்டமானவைகளே. இவற்றிற் பெருந்தன்மையுடைய ஓர் அரசன் இதயத்தைக் காண்கிறோம் ; அவனுடைய உள்ளத்தின் உயர்வும் கனிவும் எவரையும் வியப்படையச் செய்யுமென்பதிற் சந்தேகமில்லை.

இச்சிறு புஸ்தகத்தை வாசிக்கும் அன்பர் யாவரும் இந்திய சரித்திரத்தைப்பற்றிய ஆராய்ச்சிகளிற் பிரியம் கொள்ளத் தூண்டப்படலாம். ஏனென்றால், சரித்திரத்தின் மூலாதாரமாயுள்ள தஸ்தாவேஜுகளைத் தாமே படித்து விஷயங்களை ஆய்வது மிகவும் இன்பமான காரியமாயிருக்கவேண்டும். எவ்வளவு விரிவாக எழுதப்பட்டிருக்கும் சரித்திரப் புஸ்தகங்களைப் படிப்பதும் இதற்கு நிகராகாது.