பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/44

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் தர்மம்

னுடைய உழைப்பின்றி நடந்திராது. புத்தரின் மரணத்துக்குப் பின் அவருடைய ஸங்கம் கொஞ்சங் கொஞ்சமாக வட இந்தியாவில் பரவி வந்தது. அசோகனது உழைப்பின் பயனாக அது இந்தியா முழுமைக்கும் முக்கிய மதமாயிற்று. இந்தியாவுக்குப் புறமேயும் ஆயிரக்கணக்காக ஜனங்கள் புத்தரின் மதத்தைச் சரணமடைந்தனர். 'எங்கும் தர்மத்தின் ஜயபேரிகை முழங்கிற்று. பல நூற்றாண்டுகளாக ஒருபோதும் சம்பவியாத விசேஷம் பியதஷி அரசன் தர்மத்தைப் பின்பற்றியதால் சம்பவித்தது தர்மத்தின் வெற்றி எங்கும் தெரியவந்தது' (ஐந்தாம் சாஸனம்) இவ்வசனங்கள் தனது காலத்துக்குப் பின் பௌத்த மதம் அடையப்போகும் கீர்த்தியையும் புகழையும் தனது அகக் கண்ணால் அரசன் உணர்ந்து கூறியவைபோலிருக்கின்றன.

அரசனுக்கு ஸங்கத்தின் தலைமை ஸ்தானம் ஏற்பட்டதால் பல விசேஷக் கடமைகள் ஏற்பட்டன, ஸங்கத்தின் காவலனாக அவன் அதில் கட்சிகளும் கொள்கை வேறுபாடுகளும் வராமல் காக்கவேண்டியதாயிற்று. ஆசாரங்களைக் காப்பாற்றவும், புத்தரின் வாக்கியங்கள். எவையென்று தீர்மானஞ்செய்யவும், மதக்கொள்கைகளை ஆராயவும் அரசன் ஒரு மகாஸபை கூட்டிய விஷயம் முன்னமே சொன்னோம். அதல்லாமல், பிஷுக்களை எச்சரிக்கை செய்தல், ஸ்தூபங்களைக் கட்டுவித்தல், விஹாரங்களைப் பாதுகாத்தல், காட்டுஜாதியாருக்குத் தர்மத்தைப் போதித்தல், நாட்டிலுள்ள பௌத்த ஸங்கங்களைப் பரிபாலித்தல், அதன் கிளைகளில் சண்டை சச்சரவுகளைத் தவிர்த்தல் இவையெல்லாம் அரசன் கவனிக்கவேண்டிய விஷயங்களாயின.

அசோகன் காலத்துக்கு முன்னுள்ள பௌத்தசங்க சபைகளின் வரலாற்றை இங்கே சுருக்கிக் கூறுவது தகும்.

3