பக்கம்:அசோகனுடைய சாஸனங்கள்.pdf/52

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அசோகன் தர்மம்

41

சுவர்க்கசுகமென்றும் திரும்பத் திரும்பக் கூறப்பட்டிருப்பது வியப்பாயிருக்கிறது. புத்தர் போதித்த சதுர் ஆர்ய ஸத்தியமும், எட்டுவகைத்தியானங்களும் மனித வாழ்வின் முடிவாகிய நிர்வாணமும் அசோகனால் மறக்கப்பட்டனவா ? இல்லை. ஆனால் காலக்கிரமத்தில் பௌத்த மதத்தில் உண்டான மாறுதல்களுக்கு அசோக சாஸனங்கள் அறிகுறியாயிருக்கின்றன. அசோகன் தனது பிரஜைகளுக்கு நற்குண நற்செய்கைகளின் அவசியத்தை வற்புறத்த எண்ணியதால் அவ்வழியில் நடப்பதின் பயனான சுவர்க்கத்தைப் பற்றியும் அவனுக்கு எடுத்துரைப்பது அவசியமாயிற்று. சுவர்க்கமென்பது தான் பாமர ஜனங்களின் பிரவிர்த்திகளுக்கு ஏற்ற தூண்டுதல் என்று அசோகன் உணர்ந்தான்போலும். கௌடல்யனுடைய அர்த்தசாஸ்திரத்திலும் இக்கொள்கை விசேஷமாகச் சொல்லப்பட்டிருக்கிறது.

கௌதம புத்தரும் சுவர்க்கானுபவத்தைப் பற்றிக் கூறுவது தப்பிதமாக நினைக்கவில்லை. ஆனால் அவருடைய முக்கியமான உத்தேசம், ஆசை மோகம் முதலிய கட்டுக்களை அறுத்துத் தள்ளக்கூடிய பலவான்களை ஒன்று சேர்த்துத் திரட்டி அவரை ஒரு சங்கமாகச் சேர்க்க வேண்டுமென்பது, அதற்கிணங்க அவர் வெகுவாகப் பிறப்பு, இறப்பு, மூப்பு, பிணி என்ற துக்கங்களையும் அவற்றின் கொடுமையையும், அவற்றிலிருந்து விடுபடுவதற்கு ஏற்ற நிவிர்த்திமார்க்கத்தையும் பற்றிப் போதித்தார். ஆனால் அவர் சாதாரண ஜனங்களிடம் இவ் விஷயங்களைப்பற்றிப் பேசாமல் அன்பு, வாய்மை, ஈகை என்ற குணங்களின் மேன்மையைப்பற்றிப் பேசினார்.

புத்தர் காலத்துக்குப் பின் அவர் சிஷ்யர்கள் பிரவிர்த்தி நிவிர்த்தி என்ற இருவிதமார்க்கங்களின் வேற்-