பக்கம்:அசோகர் கதைகள்.pdf/55

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

கதை மூன்று

53

முன் பின் பழக்கமில்லாத நிலையில், அப்போதே தான் மாமன்னருடன் வாதிடுவது சரியல்ல என்ற நினைப்பில் அவன் அன்று எதுவும் பேசவில்லை.

விருந்து முடிந்தவுடன், மான்னர் காசியரசருடன் அரசியல் பற்றிச் சிறிது நேரம் பேசிக்கொண்டிருந்து விட்டுப் புறப்பட்டார்.

நெடுநாட் கழித்து ஈசுவரநாதனுக்கு ஒரு வாய்ப்புக் கிடைத்தது. அசோக மாமன்னருடன் கூட இருந்து பழகும் ஓர் அரிய வாய்ப்பு- அவனுடைய இலட்சிய நாயகரை அணுகிப்பழகும் கிடைத்தற்கரிய சிறந்த வாய்ப்பு, அவன் எதிர்பாராமலே கிடைத்தது.

அசோகர் புனித மன மாற்றம் அடைந்த பிறகு புத்த சங்கத்தில் சேர்ந்து, அன்பும் அறநெறியும் பரவப் பாடுபட்டார். உண்மையும் ஒழுக்கமும் ஒவ்வொரு மனிதன் வாழ்விலும் அரசியலிலும் கூட நிலைக்கவேண்டுமென்று பெரு முற்சியுடன் தளராது உழைத்தார். அதற்காக, புத்த சங்கக் கொள்கைகளிலே தம் மனத்தை ஈடுபடுத்தியதற்காக, அரசியல் வேலைகளில் கவனம் செலுத்தாமல் இருந்துவிடவில்லை.

அசோகருடைய பெரும் பேரரசு, அவருடைய காலத்தில் சிதறாமல் குலையாமல் கட்டிக் காக்கப்பெற்று வந்தது. இதற்கு அவர் இரத்தவெறி மிகுந்த போர்முறையையோ, அநாகரிகமான நேர்மையற்ற இராஜ தந்திர முறைகளையோ கையாளவில்லை. ஒவ்வொரு செயலிலும் அவர் உண்மையையும் அன்பையும் கருவிகளாகக் கொண்டு அறவழியை நிலைநாட்டுவதில் வெற்றி கண்டார்.

"https://ta.wikisource.org/w/index.php?title=பக்கம்:அசோகர்_கதைகள்.pdf/55&oldid=734179" இலிருந்து மீள்விக்கப்பட்டது