பக்கம்:அடுக்குமொழி அகராதி.pdf/3

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

4


சூலில்லா மேகத்தால், சுடர்முத்தில்லாச் சிப்பியினால், பொருளுணர்த்தாப் பாட்டிசையால் புண்ணியம் ஏதுமில்லை. அரியதொரு கருத்தில்லா அடுக்கு மொழிகளும் அந்நிலையில் உள்ளனவே. கருத்தை நன்குணர்த்திக் கவினோடு ஒலிப்பதுவே, செந்தமிழ் மொழியினது சந்தத்தின் நயமாகும் ; இந்தச் சிறப்போடு இலங்குவது இந்நூலாம்.

"கைபுனைந் தியற்றாக் கவின்பெறு வனப்பு", "உருவத்தால் இருவராகி உள்ளத்தால் ஒருவராதல்," "அறிவுள் அறிவை அறியுமவரும் அறியவரிய பிரமம்", "நாவொடு நவிலா நகைபடு தீஞ்சொல்", "கிஞ்சுகவாய் அஞ்சுகம்", "கனியினும் இனிய மென்மழலைக் குழவி"- இவைபோன்ற நன்முத்துக்களின் கோவை இந்நூல். அடுத்துவரும் பதிப்புக்களில் இத்தொகுப்பு இன்னும் விரிவடையுமென நம்புகிறேன்.

பட்டத்தைப் பெற்றவுடன் படிப்பனைத்தும் முடிந்ததென்று, இட்டப்படி வாழும் ஏனையோர் போலின்றி, கன்னித்தமிழ் மொழியைக் கவனத்துடன் ஆய்ந்து, அன்னையாம் அவளுக்கு ஆர்வமுடன் பணிசெய்யும், அன்பர் திரு. சதாசிவத்தின் அரிய முயற்சியை நாம், ஆதரித்துப் பாராட்டல் அனைவரின் கடனாகும்.

இன்னும் இதனைப் போல் எத்தனையோ நூல்கள் பல, எழுதி உலகினுக்கு ஈந்து இவர் பணிசெய்ய, "தமிழொடு பிறந்து பழமதுரையில் வளர்ந்த" அங்கயற்கண்ணியம்மை அருள் என்றும் உளதாக.


சென்னை, 3-9-'64 - மா. சண்முக சுப்பிரமணியம்.