பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/105

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

100

அ ணி ய று ப து



35. நூலுக் கணியுணர்வின் நுண்மை; நுவல்கின்ற
கோலுக் கணிநீதி கோடாமை;- மாலுக்கு
மன்னுயிரைக் காப்பதே மாணணி; மாதவமே
தன்னுயிருக்கான அணி.

(ஙரு)

இ-ள்

நுண்ணிய உணர்வுண்மையே நூலுக்கு அழகு; நீதி கோடாமையே செங்கோலுக்கு அழகு; மன்னுயிரைக் காப்பதே திருமாலுக்கு அழகு; மாதவமே மனிதன் உயிர்க்கு இனிய அழகு என்க.

உள்ளத்தை உயர்த்தி உணர்வை ஒளி செய்து உறுதி நலன்களை உயிர்க்கு இனிது அருள வல்லது எதுவோ? அதுவே மேலான நல்ல நூலாம்.

உரத்தின் வளம்பெருக்கி உள்ளிய தீமைப்
புரத்தின் வளமுருக்கிப் பொல்லா - மரத்தின்
கனக்கோட்டம் தீர்க்குநூல் அஃதேபோல் மாந்தர்
மனக்கோட்டம் தீர்க்கும் நூல் மாண்பு.

(நன்னூல்)


அறிவை வளர்த்துத் தீமையை ஒழித்து மனக் கோட்டத்தை நீக்கி மாட்சிமை ஆக்கி உயிர்க்கு உறுதி புரிவதே நூல் என இது குறித்துள்ளது.

எங்கும் நேர்மையாய் எவ்வழியும் நீதிநெறி தோய்ந்து எவ்வுயிர்க்கும் இதம்புரிந்து வருபவனே செங்கோல் வேந்தனாய் நன்கு சிறந்து வருகிறான்.

உயிரினங்களைக் காத்தருளும் பெருமாள் ஆதலால் திருமாலுக்குக் காப்புக் கடவுள்என்று பெயர்.

அரிய தவம் உயிர்க்குப் பெரிய இன்பங்களை அருளுகிறது. அதனை மருவினார் மகிமையுறுகிறார்.