பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

101


தவம்செய்வார் தம்கருமம் செய்வார்மற் றல்லார்
அவம்செய்வார் ஆசையுட் பட்டு.

(குறள் 266)

தவமே ஆன்ம உய்தியை அருள வல்லது: அதைச் செய்தவர் உயர்ந்து உய்தி பெறுவர். செய்யாதவர் இழிந்து கழிவர் என இது குறித்துளது.


36.கொல்லாமை நோன்பின் குலவணி;கோதுவழி
செல்லாமை சீரின் சிறப்பணி;-நில்லாமை
உள்ளி உணர்தல் உணர்வணி; பாலர்க்குப்
பள்ளி புகுதல் அணி.

(ஙசு)

இ-ள்

தவவிரதத்துக்கு உயர் அழகு எதையும் கொல்லாமை; சீருக்குச் சிறந்த அழகு தீயவழியில் செல்லாமை; நிலையாமை நிலையைத் தெளிவது உணர்வுக்கு அழகு; பள்ளி புகுதல் பாலர்க்கு அழகு என்க.

தன் உயிர் இன்பமாயிருக்க விரும்புகின்றவன் பிற உயிர்கள் துன்புறச் செய்யலாகாது, பொறிகளை அடக்கிப் பொறுமையாய்ச் செய்யும் தவம் நோன்பு என வந்தது. எவ்வுயிர்க்கும் இடர் செய்யாமல் இருந்தால் அது சிறந்த தவமாய் வருகிறது.

நோன்பு என்பதுவே கொன்று தின்னாமை

கொல்லாமையும் புலால் உண்ணாமையுமே புண்ணியமான தவம் என ஒளவையார் இவ்வாறு அருள் நிலையைச் செவ்வையாக் கூறியிருக்கிறார்.

கொல்லா விரதம் ஒன்று கொண்டவரே நல்லவர்; மற்று

அல்லாதார் யாரோ? அறியேன் பராபரமே.