பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/110

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

105



உற்றது கொண்டு மேல்வந் துறுபொருள் உணரும் கோளார்; மற்றது வினையின் வந்தது ஆயினும் மாற்றல் ஆற்றும் பெற்றியர்;பிறப்பின் மேன்மைப் பெரியவர்:அரிய நூலும்
கற்றவர்; மானம் நோக்கின் கவரிமா அனைய நீரார்.

(இராமாயணம்)

மந்திரிகளுடைய மாட்சிமைகளைக் குறித்து வந்துள்ள இவை இங்கே நன்கு சிந்திக்க வுரியன.



39.தாய்மொழியைப் பேணல் தமிழர்க் கணிதமது
வாய்மொழியைப் போற்றல் வணிகரணி-சேய்மொழி
ஈன்றார்க் கணியதுபோல் எவ்வுயிர்க்கும் எவ்வழியும்
ஆன்றோர் மொழியே அணி.

(ஙகூ)
இ-ள்

தமது தாய்மொழியைப் பேணிவரல் தமிழர்க்கு அழகு, தாம் கூறிய வாய் மொழியைக் காப்பாற்றுதல் வணிகர்க்கு அழகு; தம் மக்கள் மழலை மொழியைக் கேட்டல் பெற்றோர்க்கு அழகு; ஆன்ற பெரியோர் மொழி யாவருக்கும் அழகாம் என்க.

தாய் மொழி, வாய் மொழி, சேய் மொழி, தூய் மொழி இங்கே தெரிய வந்துள்ளன. தேசங்கள் தோறும் பேசும் மொழிகள் வேறுபட்டிருக்கின்றன. அந்த அந்த நாட்டில் வழங்கி வருகிற மொழிகளை இளமையிலிருந்தே வழக்கமாய்ப் பேசி வருகிற மக்களுக்கு அவை தாய்மொழிகள் ஆகின்றன.

இந்நாட்டில் வழங்கி வருவது தமிழ்மொழி. இம் மொழியை இயல்பாய்ப் பேசி வருபவர் தமிழர்கள்.

14