பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/125

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

120

அணியறுபது


பிறவிப் பேற்றை இழந்த பேதைகளாய் அவர் இழிக்கப் படுவர். அகந்தை, மமதை, இறுமாப்பு என்பன அவலக்கேடுகளையே விளைத்துவிடுகின்றன

எழுத்துச் சொற்பொருள் யாப்பு அலங்காரம் என்று
இவற்றைக் கற்று இறுமாப்புறும் பேய்சில.

(மோகவதைப்பரணி)

உயிர்க்கு உரிய பயனை அடையாதவர் எவ்வாறு கடையராயிழிவுறுகின்றனர் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். உயிர் துயருறாமல் உய்தியைச் செய்து கொள்ளுவதே மெய்யான உணர்வின் மேலான உயர் பயனாம்.

---

49.உடலுக் கணிநீர் உயிர்க்கணி நீர்மை
அடலுக் கணிஐம் பொறியே-மிடலுக்குச்
சிந்தை அடக்கலணி சித்தபரி சுத்தமே
அந்தமிலான் எய்த அணி.

(௪௯)

இ-ள்.

குளிர்ந்த நீரே உடலுக்கு அழகு; சிறந்த நீர்மையே. உயிருக்கு அழகு; ஐம்பொறிகளை வெல்லுதலே அடலாண்மைக்கு அழகு; சிந்தையை அடக்குதலே வீரத் திறலுக்கு அழகு; சித்த சுத்தியே ஈசனை அடையவுரிய வித்தக அழகு என்க.

நீரால் உடம்பு தூய்மையாம்; தண்ணளியால் உயிர் ஒளிமிகப் பெறும் புலன் அடக்கத்தால் அதிசய ஆற்றல் உண்டாம்; உள்ளம் அடங்கின் உலகம் அவன்பால் அடங்கும்; இதயத் துய்மை. இறைவனுக்கு இனிய நிலையமாம். மனிதனது மனம் புனிதமானால் அவன் பரமனது இனம் ஆகின்றான்.