பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/131

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

126

அணியறுபது


பெற்றது என்னே?

பிறந்துவந்த நாள்தொடங்கி இன்றுவரை
வாழ்ந்துள்ளாய்! பெற்றது என்னே?
நிறைந்தவுண வுண்டுகளித் துடல்வளர்த்து
நெடிதுநீ நெளிந்து நின்றாய்!
சிறந்தவுயிர்க்கு ஏதேனும் ஒருநலனைத்
தெளிந்துநீ செய்த துண்டோ?
மறந்தழைந்து வரவாழ்ந்து மண்ணாகி
மடிந்தொழிதல் மதிகே டந்தோ!

(8)


உற்றதை உணர்க

நாள் கழிந்து போந்தோறும் நமன்உன்மேல்
வருகின்றான்; நாளும் நாளும்
மாள்வதே தொழிலாகி மாண்டுகழிந்
தொழிகின்ற மருமம் தன்னை
ஆளெனநீ வந்திருந்தும் அறியாமல்
அழிவுறுதல் அவல மன்றோ?
நீளநினைந் துணர்ந்தின்றே நின்உயிர்க்கு
நிலையின்பம் நிறைக நேர்ந்தே!

(9)

உன் உள்ளே பார்

உன்னுள்ளே உறைந்திருக்கும் உயர்பரனை
உணர்ந்துள்ளே உருகி நாளும்
தன்னுள்ளே நோக்கிவரின் தனிப்பரமா
னந்தநிலை தழைத்துள் ஓங்கி
மின்னுள்ளே பிறந்துவரும் ஒளிஎனவே
வெளியாகி மேலாம் இன்பம்
நின்னுள்ளே நிறைந்துவரும் நிலைதெரிந்து
நெறிதெளிந்து நேர்க நின்றே.

(10)