பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/133

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

128

அணியறுபது


51.தன்னை அறிவதே தத்துவ ஞான அணி;
பின்னை அறிவது பித்தணியே;-முன்னம்
தனையறிய நேரின் தரணியி லுள்ள
அனைவர்க் கவனே அணி. (௫க)

இ-ள்


தனது ஆன்ம நிலையை அறிவதே மெய்யான ஞான அழகு; வேறு தெரிவதெல்லாம் மாறான ஊன அழகு; தன்னை ஒருவன் உணர நேரின் இந்த உலகில் உள்ள எவர்க்கும் அவனே தலைமை அழகனாய் நிலவி நிற்பன் என்க.


உரிமையாய் உணர வுரிய உண்மைப் பொருள் தெரிய வந்தது. எதை உணர்ந்தால் எல்லாம் உணர்ந்ததாமோ அதை உணர்க. அவ் வுணர்வு துக்கத்தை நீக்கிச் சுகத்தை ஆக்கி யருளும்.


உயிரும் உடலும் கூடி உலாவி வருகிற உருவங்களுள் மனித இனம் மதிநலம் உடையதாய் மருவியுளது. அந்த மதி கூர்மை வாய்ந்தது எனினும் தன்னேக் கூர்ந்து அறிவதில்லை. இந்த அறியாமையே எல்லாத் துயரங்களுக்கும் மூல காரணமாய் மூண்டு நிற்கிறது. தன்னே மறந்து தாழ்ந்ததனாலேயே இன்னல் இழிவுகள் எங்கும் தொடர்ந்து சூழ்ந்துள்ளன.


தோலால் செய்த பாவைகளை உள்ளே இருந்து ஒருவன் ஆட்டுவது போல் இந்த உடல் இயங்கி வருகிறது. அகத்தே அமர்ந்து இயக்குகிறவன் யார்? உயிர் என ஒரளவு உரையாடி வரினும் அதன் உண்மை நிலையை உணர்ந்து தெளியாமல் மாய மயல்களில் அழுந்தி யாவரும் மறுகி யுழல் கின்றனர்.