பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/135

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

130

அணியறுபது


நிலைகளைக் கூர்ந்து உணர்ந்து உண்மையை ஒர்ந்து தேர்ந்து தெளிந்து கொள்ள வேண்டும்,


தன்னை அறியாமல் மறந்து போனதினாலேயே பிறந்து பிறந்து மனிதன் பெருந்துயரங்களே அடைய நேர்ந்தான். எதை எதையோ அறிய வேண்டும் என்று ஆவலாய் வெறிகொண்டு ஒடி உழலுகின் றான்; அவை யாவும் அவலப் புலைகளே.


தனது உண்மையை உணர்ந்து தன் உயிரைத் தனக்கு உரிமையாகப் பெற்றவனே பிறவித் துயரங்கள் முற்றும் அற்றுப் பேரின்ப நிலையைப் பெறுகின்றான். தேவர் முதல் யாவரும் அப் பேறாளானை வியந்து புகழ்ந்து உவந்து போற்றுகின்றனர்.

தன்னுயிர் தானறப் பெற்றானை ஏனைய
மன்னுயிர் எல்லாம் தொழும்.

(குறள் 268)


இந்த அருமைத் திருக்குறளின் பொருளைக் கருதியுணர்ந்து நாளும் சிந்தித்து வர வேண்டும். உன் உயிரை நீ உரிமையாகப் பெற்றால் உலகத்தில் உள்ள உயிர்கள் எல்லாம் உன்னைப் பெருமையாகத் துதித்துத் தொழுது வரும் என்ற இதில் எவ்வளவு மருமங்கள் மருவியுள்ளன! ஒர்ந்து கருதி உணருக.


உடலுள் உறைந்துள்ள உயிர் இயல்பாகவே அறிவும் இன்பமும் உடையது. எல்லாவற்றையும் அறிய வல்லது. எங்கும் சுக வடிவமானது: எவ்வழியும் விழுமிய மகிமையது: என்றும் நிலையானது.


புனிதமான இந்த ஆன்மாவே தனது இனிய நிலை என்று மனிதன் தெளிவாய் உணர்வதில்லை.