பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/137

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

132

அணியறுபது


விளேவு முதலியவற்றை அறிந்ததுபோல் பன்னிப் பன்னிப் பாராட்டிப் பேசி வருவதால் உனக்கு என்ன பலன்? உன்னுடைய உண்மை நிலையை முன்னதாக உணர். அவ்வாறு உணரின் தன்னுயிரைத் தான் அறப் பெற்றவனாய் மன் உயிர் எல்லாம் தொழுது வர, வானமும் வையமும் வணங்கி வர விழுமிய பேரின்ப நிலையில் விளங்கி மிளிர்வாய்.

உன்னை நீ அறிந்தால் எல்லாம் அறிந்த இறை எனல் ஆமே என்னும் இந்த மந்திரமொழி ஈண்டு ஆழ்ந்து சிந்தனை செய்து தெளிய வுரியது.

உன்னை நீ முன்னம் உணர்ந்தனை என்றால்
உயர்வற உயர்ந்துள ஒருவன்
தன்னையும் உணர்ந்தாய்! தத்துவம் தெளிந்தாய்!
தமர்மனை மக்கள் என்று அயலே
மன்னிய உறவின் வகைதொகை அறிந்தாய்!
மறிதிரையைக் கடல் என வளைந்த
இன்னல்வெம் பிறவி இடரையும் கடந்தாய்!
இன்பமே இயல்புடன் இருந்தாய்!

இந்தக் கவியில் கனிந்துள்ள பொருள் நலன்களையும் குறிப்புகளையும் கூர்ந்து ஓர்ந்து கொள்ள வேண்டும். உடலில் உள்ள சீவ ஒளியை உண்மையாக உணர நேரின் அது தேவ ஒளியாய்த் திகழ்ந்து வருவதைத் தெளிவாகத் தெளிந்து கொள்ளலாம்.

உயிர் துயர் நீங்கி உய்யும் வகையைச் செய்பவனே மெய்யறிவாளனாகிறான். அவன் பிறப்பே பெரு மகிமையுடையது; பேரின்ப வீட்டுக்கு அவனே உரியவன் ஆகிறான். ஆவதை ஆய்ந்து தெளிக.

---