பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/143

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

138

அணியறுபது

 போகிக்கு அழகு; தேக நிலைமையைத் தெளிதல் தேகிக்கு அழகு; உள்ளம் தெளிந்தவர்க்கு மீண்டும் உடல் உறாத தலைமையே அழகு என்க.

நான்கு வகை நிலைகள் ஈங்கு அறிய வந்துள்ளன.

யோகம் என்னும் சொல் கூடுதல், சேர்தல் என்னும் பொருள்களை யுடையது. யோகத்தை யுடையவன் யோகி. எவரோடும் கூடாமல் ஏகாந்தமாய்த் தனியே அமர்ந்து இறைவனையே கருதியுருகி யிருப்பது யோக நிலை. ஆன்மா பரமான்மாவோடு கூடியிருக்கும் கூட்டத்தை இது குறித்துள்ளது. அமைதியும் சித்தசாந்தியும் யோகியின் இயல்புகளா யினிதமைந் துள்ளன. ஆன்மாவையே நோக்கி வருபவர் மேன்மையான ஆனந்த நிலையை அடைந்து வருகின்றார்

போகி=போகங்களை வளமாக வுடையவன். இந்திரனுக்கு இப்படி ஒரு பெயர். நிறைந்த செல்வங்களும் சிறந்த சுகபோகங்களும் போ கி க் கு உரிமைகளாய் உவகை புரிகின்றன.

தேகி=சீவன். தேகத்துள் இருப்பவன்: தேகத்தையுடையவன் என்பதாம். தனக்கு நிலையமாயுள்ள தேகத்தின் நிலைமைகளை உணர்ந்து மறுபடியும் பிறவித் துயரங்கள் நேராதபடி செய்துகொள்பவனே உயிர்க்கு நன்மையைச் செய்துகொள்ளுகின்றான்.

உண்மையை உறுதியாகத் தெளிந்தவர்க்கு அழகு எது? புன்மையான உடம்பை எடுத்து மேலும் மேலும் பிறவித் துன்பங்களில் உழலாமல் பேரின்ப முத்தியைப் பெறுவதே யாம்.