பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/153

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

148

அணியறுபது


வாறு செய்து பின்பு அழிதுயரங்களை அடைந்து அழுது புலம்பி அலமந்து உழல்கின்றான்.

தீய வழியில் பழகிய தீவினையாளர்க்கு நல்ல அறிவுரைகளை மேலோர் அருளோடு நயந்து கூறினும் உவந்து கேளார். மருளோடு இகழ்ந்தே போவர். செய்த தீவினைப் பயன் எய்தியபோது ஐயோ! என்று அவர் அலறி அழுது துடிப்பர்.

மறத்துறை நீங்குமின்! வல்வினை ஊட்டும்என்று
அறத்துறை மக்கள் திறத்திற் சாற்றி
நாக்கடிப் பாக வாய்ப்பறை அறையினும்,
யாப்பறை மாக்கள் இயல்பிற் கொள்ளார்;
தீதுடை வெவ்வினை உருத்த காலைப்
பேதைமை கந்தாப் பெரும்பே துறுவர்.

(சிலப்பதிகாரம் 14)

தீவினையாளருடைய புலைநிலைகளை இது தெளிவாக விளக்கியுள்ளது. இனிய போதனைகள் யாதும் அவர்க்கு ஏறாது. கொடிய வேதனைகள் ஏறி வதைத்த பொழுது அவர் பதைத்து அழிவர்.

யாப்பு = உறுதியான அறிவு. மாக்கள் என்றது மக்களுக்கு உரிய மதிநலனை இழந்துபோன அந்த, இழிவு நிலை தெளிவாய்த் தெரிய வங்தது.

மனநினைவும் வாய்மொழியும் மெய்ச் செயலும் புனிதமாய்வரின் அந்த மனிதன் மகானாய் உயர்கிறான், எல்லாவற்றிற்கும் மனம் மூல நிலையம் ஆதலால் அதன் தலைமை தெரிய முதன்மையா வந்தது.

புனிதமான இனிய மனம் அரிய மகிமைகளைத் தனியே எங்கும் நலமா விளைத்தருளுகிறது.