பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/154

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

149


மனத்தினும் வாயினும் மெய்யினும் செய்கை
அனைத்தினும் ஆன்றவிந்தார் ஆகி-நினைத்திருந்து
ஒன்றும் பரியலராய் ஒம்புவார் இல்லெனின்
சென்று படுமாம் உயிர்.

(பழமொழி 359)

மூன்று கரணங்களும் இனியராய் ஆன்று அவிந்து அடங்கியுள்ள சான்றோராலேயே இவ்வுலகம் இனிது நடந்து வருகிறது. அவ்வுண்மையை இது தெளிவாக உணர்த்தியுள்ளது.

------

56. ஆசை யறுதல் அறிவுக் கரிய அணி;
பாசம் அறுதல் பவமறுதற் கானவணி;
ஈசனைச் சேர்தல் இனிய உயிர்க்கணி;
யோசனை ஒர்வுக் கணி.

(56)

இ-ள்.

ஆசையை அழித்து ஒழித்தலே அறிவுக்கு அரிய அழகு; உலக பாசத்தை ஒருவி விடுதலே பிறவி அறுதற்கு அழகு; ஈசனைச் சேர்தலே சீவனுக்கு அழகு; கூரிய யோசனையே சீரிய ஓர்வுக்கு அழகு என்க. ஓர்வு=ஒர்ந்து உணரும் அறிவு.

அல்லல் உறாமல் பேணி உயிர்க்கு நல்ல சுகத்தை ஆற்றி வருவதே தெள்ளிய அறிவாம். கொடிய துயரங்களுக்கெல்லாம் ஆசை நெடிய நிலையம். ஆதலால் அதனை அடியோடு அறுத்துஒழித்தால் அன்றி உயிர் துயர் நீங்கி உயர்வுறாது.

ஆசை யறுமின்கள்! ஆசை அறுமின்கள்!
ஈசனோ டாயினும் ஆசை அறுமின்கள்
ஆசை படப்பட ஆய்வரும் துன்பங்கள்
ஆசை விடவிட ஆனந்தம் ஆமாமே.

(திருமந்திரம்)