பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/158

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

153



தீய எண்ணங்கள் ஆகிய அழுக்குகள் மனத்தில் படியாமல் எவன் பாதுகாத்து வருகிறானோ, அவன் தூயனாய்யுயர்கின்றான். மாசில்லாத அந்த மனத்தையுடையவன் மாசில்லாமணியாகிய ஈசன் இனத்தனாய் இன்பம் மிகப் பெறுகின்றான்.

யாவர்க்கும் அரியனாயுள்ள பரமன் அன்பர்க்கு எளியனாய் அருள் புரிகின்றான். பத்திவலையில் படுவோன் என ஆண்டவனுக்கு ஒரு பெயர் வித்தக மாயமைந்துளது. அன்பினில் விளைந்த ஆரமுதே ! என்று ஈசனை மணிவாசகப் பெருமான் அனுபவித்துத் துதித்திருக்கிறார்.

அன்பெனும் பிடியுள் அகப்படும் மலையே!
அன்பெனும் குடில்புகும் அரசே!
அன்பெனும் வலைக்குள் படுபரம் பொருளே!
அன்பெனும் கரத்தமர் அமுதே!
அன்பெனும் கடத்துள் அடங்கிடும் கடலே!
அன்பெனும் உயிர்ஒளிர் அறிவே!
அன்பெனும் அணுவுள் அமைந்தபேர் ஒளியே!
அன்புரு வாம்பர சிவமே!

(அருட்பா)

கற்றதனால் தொல்லைவினைக் கட்டறுமோ நல்லகுலம்
பெற்றதனால் போமோ பிறவிநோய்-உற்றகடல்
நஞ்சுகந்து கொண்டருணை நாதனடித் தாமரையை
நெஞ்சுகந்து கொள்ளா நெறி.

(அருணகிரியந்தாதி)

இறைவனை நினைந்து கரைந்து உள்ளம் உருகி வரின் பிறவி நோய் தீர்ந்து பேரின்பம் பெருகிவரும் என இவை குறித்துள்ளன. பிறவாத பேரின்பப் பொருளை ஆர்வம் மீதுர்ந்து அடைந்தபோதுதான் அவலத் துயரங்கள் யாவும் அழிய நேர்கின்றன.

2O