பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/167

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

162

அணியறுபது



உண்ணின்று ஒளிரும் உலவாப் பிராணனும்
விண்ணின்று இயங்கும் விரிகதிர்ச் செல்வனும்
மண்ணின்று இயங்கும் வாயுவு மாய் நிற்கும்
கண்ணின்று இலங்கும் கருத்தவன் தானே. . (1)

நீரும் நிலனும் விசும்புஅங்கி மாருதம்
தூரும் உடம்புறு சோதியு மாயுளன்
பேரும் பராபரன் பிஞ்ஞகன் எம்மிறை
ஊரும் சகலன் உலப்பிலி தானே. (திருமந்திரம்)


என்றும் நிலையாய் எங்கும் பரந்துள்ள பரப்பிரமமே சீவசோதியாய் உடம்புள்ளும் மருவியுளது எனத் திருமூலர் இவ்வாறு உணர்த்தியுள்ளார். உடலுள்ளே ஒளி செய்துள்ள உயிரை உரிமையாகப் பெற்றவனே உயர் பேரின்பம் பெற்றவனாகின்றான்.

உண்மை தெளிக; உய்தி பெறுக.



60.

எடுத்த பிறவிக் கினிய அணி என்றும்
அடுத்த பிறவி அடையாது-உடுத்த
உடல்கழிய நின்ற உயிர்பரமாய் இன்பக்
கடல்படிந்து நிற்றலே காண்.

(சு௰)

இ-ள்.


அடுத்த பிறவி அடையாமல் ஆக்கிக் கொள்வதே எடுத்த பிறவிக்கு உரிய பெரிய அழகு; உற்ற உடல் ஒழிய உயிர் பரமாகிப் பேரின்பப் பெருக்கில் திளைப்பதே ஆன்மாவுக்குப் பேரழகு என்க.


ஆன்ம அழகு மேன்மையாய் அறிய வந்தது.


பிறவியில் துன்பங்கள் பெருகி வருகின்றன்; பிறவாமையுள் இன்பங்கள் நிறைந்திருக்கின்றன.