பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/19

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

14

அணியறுபது

பிறவித் துயரங்களை நீக்கிப் பேரின்பம் அருள வல்ல பெருமான் திருவடிகள் இங்கே உரிமையுடன் உணர வந்தன. உண்மையை ஒர்வது உய்தியுறுவதாம்.

வணக்கம்.

தந்தையே தாயே தனிப்பரனே என்றுன்னை
வந்தித்துப் பாடும் வகையடக்கி-உந்து
திரையாடு செந்தில் சிவனே! இதனை
உரையாடு கின்றேன் உவந்து.

(2)

இ-ள்.

செந்திலம்பதியில் எழுந்தருளி யுள்ள இன்ப மயமான பரம் பொருளே, தந்தையே! தாயே! தனிமுதலே! என்று சிந்தை உருகி உன்னை எந்த வேளையும் துதிக்கும் துதிகளை அடக்கிக்கொண்டு இந்த நூலை உலக நலம் கருதி இயற்றுகின்றேன்.

அடக்கி ஆடுகின்றேன் என்றது, பாடுகின்ற பனுவலின் மேன்மையும் பாடும் புலவனது பான்மையும் நாடி உணர வந்தது.

நூலறிவுக்கு உரிய பெரிய பயன் வாலறிவனைக் கருதி உருகித் தொழுது துதித்து உழுவலன்புடன் உள்ளம் தூய்மையாய் ஒழுகி வருவதே யாம்.

உலக உயிர்களுக்கு உறுதி நலன்களை உணர்த்துவது இறைவனுக்குச் செய்யும் பணியே ஆதலால் இந்த அணி நூலை ஆக்கி யுள்ளேன்.

ஆக்கியோன் குறிக்கோளும், ஆக்கிய நூலின் அமைதியும் இதனால் இனிது அறிய லாகும்.