பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/22

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணியறுபது

17

வாய் இனிக்க என்றது. வாசிக்குந் தோறும் மகிழ்ச்சி மீதூர்ந்து மாட்சி யுற்று நிற்றலை.

செவி இனிக்க என்றது கேட்கும் தோறும் இன்புறுதலை. சுவை நுகர்வுகள் தெரிய வந்தன.

கேட்ட செவி நினைத்த மனம் சொன்னவாய் இன்னும் என்று கிடைக்கும் என்று தேட்டமுறும்படி நூல் கிளர்ந்து வந்துள்ளமை தெளிந்து கொள்ள வந்தது. உண்மை தெளிவது உணர்வின் ஒளியாம்.

மாந்தருக்கு மேலான சாந்திகளை நூலறிவு சால்புடன் அருளுகிறது. உலக இருள்களை நீக்கி வெளியே இதம் செய்கிற வான ஒளிகளினும், ஞான ஒளி உயிர்களின் மருள்களை ஒழித்து உள்ளே உறுதி நலன்களை இனிது விளக்கி உய்தி புரிகிறது.

ஆதவர்கள் ஆயிரம்பேர் அகிலமெலாம்

ஒளிவீசி அருமை யாக

மீதெழுந்து வந்தாலும், வெண்திங்கள்

சதகோடி விளங்கி னாலும்,

ஒதியுணர் கலைஞான ஒளிநிறைந்த

உரவோன்போல் உயிர்கள் உள்ளே

தீதவமாய்ச் செறிந்திருக்கும் மடமையிருள்

ஒழிக்குமோ? தெளிக தேர்ந்தே!

மருளான இருள்களே நீக்கி மனிதர்களுக்கு இன்பம் அருளுகிற தெருள் ஒளி இங்கே தெரிய வந்துளது. மெய்யுணர்வை யருளி உயிர்களுக்கு உய்தி புரிகிற நூல்கள் தெய்வ ஒளிகளாய் ஓங்கி எவ்வழியும் சிறந்து திகழ்கின்றன.

3