பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/24

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



அணியறுபது

19

வெளிப் படையாய்த் தெரிய வருகிற உருவ அழகினும் உண்மையான உயிர் அழகு உயர் நிலையுடையது. அவ்வகையான செவ்விய அழகையே இந்த நூல் சிந்தை தெளிய நன்கு விளக்கியுளது.

அணியன்றோ நாணுடைமை சான்றோர்க்கு அஃதின்றேல்
பிணிஅன்றோ பீடு நடை.

(குறள் 1014)

சான்றோர்க்கு நாணுடைமையே நல்ல அணி: அஃது இல்லையேல் அவரது பெருமித நடை பெரிய பிணியாம் என நாயனர் இவ்வாறு குறித்துள்ளார்.

இத்தகைய உத்தம அணிகளே இப் புத்தகத்தில் வித்தக விவேகமாய் உய்த்துணர வந்துள்ளன.

மனிதனுடைய உறுப்புக்களுள் கண் மிகவும் தலைமையுடையது. அதற்கு உரிய அணி பிரியமுடன் முதன்மையாய்த் தெரிய வந்தது.

அருள் என்பது எவ்வுயிர்க்கும் இரங்கி யருளும் இனிய நீர்மை. இது தனி மகிமை வாய்ந்தது.

பிற உயிர்கள் துயருறக் கண்ட பொழுது எந்த மனிதன் உள்ளம் இயல்பாய் உருகி மறுகுகிறதோ அந்த மனிதன் சிறந்த மேலோனாய் உயர்ந்து நிற்கிறான். தண்ணளி புண்ணிய ஒளியா யுளது.

உயர்வான மேன்மைக்கு அடையாளம், உயிர்கள் பால் இரங்கி எவ்வழியும் இதம் புரிந்து வருவதே. பூத தயையே புனித மாதவம்.

அறுகம்புல் நோக மிதியார்; அயலார் மறுக ஒரு சொல் உரையார் எனப் பெரியார் இயல்புகள் இவ்வாறு உயர்வாய்த் தெரிய வந்துள்ளன.