பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/27

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது



22

அணியறுபது



கருணே தோய்ந்த கண்ணே கண்; அது போல் ஈகை வாய்ந்த கையே கை. ஈதலைக் கைக்கு அணி என்றது. அதனால் விளைந்து வருகிற விழுமிய பலன்களை வியந்து. தருபவன் தருமன் ஆகிறான்.

தான் வருந்தி ஈட்டிய பொருளைப் பிறரும் மகிழும்படி கொடுத்து வருபவன் கொடையாளியாகிறான். ஆகவே அவன் புகழும் புண்ணியங்களும் உடையனா யுயர்கிறான். உயரவே இம்மையும் மறுமையும் அவனுக்குத் தனியுரிமைகளாய் இன்ப நலன்களை இனிது அருளுகின்றன.

ஈகையுறு கையே இறைகோல் இனிதேந்தி
ஓகையுற நாளும் உலகாளும் - ஈகையிலாப்
புன்கை புலைக்கை புழைக்கை உலக்கைஎன
மங்கி யிழியும் மருண்டு.

பிற உயிர்கள் உவந்து வர உதவி புரிந்து வந்தவன் பின்பு இந்த உலகம் முழுதையும் ஆளும் தலைவனாய் உயர்ந்து திகழ்கிறான். அவ்வாறு உதவாதவன் எங்கும் எவ்வகையிலும் உதவாதவனாய் மங்கி இழிந்து கழிந்து ஒழிந்து போகின்றான்.

ஈயாதவன் உலோபி என யாவராலும் இழிவாக எண்ணி எங்கும் எள்ளி இகழப்படுகின்றான்.

ஈபவன் வள்ளல் என எல்லாராலும் உவந்து புகழ்ந்து யாண்டும் போற்றப் பெறுகின்றான்.

மின்னும் தமனியமும் வெற்றிரும்பும் ஓரினமாப்
பொன்னின் பெயர்படைத்தால் போலாதே - கொன்னே
ஒளிப்பாரும் மக்களாய் ஒல்லுவ தாங்கே
அளிப்பாரும் மக்களா மாறு.

(பெரும்பொருள்)