பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/29

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

24

அ ணி ய று ப து

கற்புறு சிந்தை மாதர் கணவரை அன்றி வேறுஓர்
இற்புறத் தவரை நாடார் யாங்களும் இன்ப வாழ்வும்
தற்பொறி யாக நல்கும் தலைவ நின் அலது ஓர்தெய்வம்
பொற்புறக் கருதோம் கண்டாய் பூரணானந்த வாழ்வே.

(தாயுமானவர்)

தன்பதியையே கருதி ஒழுகும் கற்பினள்போல் பரமபதியே! உன்னையே கருதி உருகி வருகிறேன் எனத் தாயுமானவர் இவ்வாறு இறைவனே நோக்கிப் பாடியிருக்கிறார். உண்மையான பத்திக்கு உத்தம பத்தினியை ஒப்புக்காட்டியுள்ளார். கற்பு என்றால் என்ன? அதனையுடையவர் எப்படியிருப்பர்? என்பதை இங்கே ஓரளவு அறிந்து கொள்கின்றோம்.

கற்பு அற்புதத் திரு; அதிசய மகிமையுடையது; அதனை உரிமையா மருவி யுள்ளவரை வையமும் வானமும் பெருமையாப் போற்றி வரும்.

நாடும் ஊரும் நனிபுகழ்ந்து ஏத்தலும்
பீடு றும் மழை பெய்கெனப் பெய்தலும்
கூட லாற்றவர் நல்லது கூறுங்கால்
பாடு சால்மிகு பத்தினிக்கு ஆவதே.

(வளையாபதி)

கற்பு மேய கனங்குழை மாதரைப்
பெற்று ளோர்தம் மரபும் பெருந்தவக்
கற்பி னாட்கொண்ட காதலன் ஆருயிர்ச்
சுற்றம் யாவும் துறக்கத்தின் எய்துமால்.

(காசிகாண்டம்)

கற்புடைமையால் விளைந்து வருகிற அதிசய மேன்மைகளை இவை துதி செய்து துலக்கியுள்ளன. பொருள்களின் குறிப்புகளையும் சிறப்புகளையும் கூர்ந்து ஓர்ந்து தேர்ந்து கொள்ள வேண்டும்.