பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/31

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

26

அணியறுபது


மல்லலங் களிற்று மாலை
வெண்குடை மன்னர் கண்டாய்
நல்லுயிர் ஞாலம் தன்னுள்
நாமவேல் நம்பி என்றான்.

(சீவகசிந்தாமணி 2908)

தேவர்தம் உலகினும் தீமை செய்துழல்
மாவலி அவுணர்கள் வைகு நாட்டினும்
ஏவெவை உலகம் என்று இசைக்கும் அன்னவை
காவல்செய் தலைவரை இன்மை கண்டிலம்.

(1)

முறைதெரிந்து ஒருவகை முடிய நோக்குறின்
மறையவன் வகுத்தன மண்ணில் வானிடை
நிறைபெருந் தன்மையின் நிற்ப செல்வன
இறைகளே இல்லன யாவை காண்கிலம்.

(2)

வள்ளுறு வயிரவாள் அரசில் வையகம்
நள்ளுறு கதிரிலாப் பகலும் நாளொடும்
தெள்ளுறு மதியிலா இரவும் தேவுடன்
உள்ளுறை உயிரிலா உடலும் ஒக்குமே.

(3)

(இராமா: 2-10)

அரசன் உலகினுக்கு உயிர்; எந்த உலகமும் தனக்கு உரிமையான ஒரு தலைவனை உடையதே; மன்னன் இல்லையானால் மாநிலம் மறுகி யுழலும்; சூரியன் இல்லாத பகலும், சந்திரன் இல்லாத இரவும், உயிர் இல்லாத உடலும், அரசு இல்லாத நாடும் அவலம் அடையும் என்று வேதமுனிவர்கள் இவ்வாறு ஓதியுள்ளனர். இவற்றை ஈண்டு ஒர்ந்து உணர்ந்து உண்மை நிலைகளைத் தேர்ந்து அரசின் பெருமைகளைத் தெளிந்து கொள்ள வேண்டும்.