பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/32

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

27


இவ்வாறு உரிமை தோய்ந்துள்ளமையால் மண்ணுலகிற்கு மன்னன் அணி என நேர்ந்தான். வையம் காக்கவுரிய வேந்தன் செய்ய நீதி முதலியவைகளால் சிறந்து திகழ்கிறான். ஆகவே அவை அவனுக்கு அணிகள் என அமைந்தன.

பூபதி, மகிபதி, பார்த்திபன் என அரசனுக்கு நேர்ந்துள்ள பெயர்கள் அவனுடைய நிலைமை, தலைமை, நீர்மைகளை வார்த்துக் காட்டியுள்ளன.

உரிய குணநலன்கள் மருவி வரும் அளவே அரசனது ஆட்சி மாட்சியடைந்து உயர்ந்து வருகிறது,

நீதி=யாதும் கோடாமல் நெறிமுறை புரிதல்.
ஒழுக்கம்=உள்ளம் தூயனாய் ஒழுகி வருதல்.
நிறை=எதையும் சீர்தூக்கிச் செம்மை செய்தல்.
அறிவு=கலை நிலைகளைத் தேர்ந்து தெளிதல்.
அஞ்சாமை=நெஞ்சம் தளராமல் நெறியே நிற்றல்.

இத்தகைய தன்மைகள் தோய்ந்துவரின் அந்த வேந்தன் எத்தகைய நிலைகளிலும் சிறந்து உத்தமனாய் உயர்ந்து ஒளிமிகுந்து விளங்குவான்.

அரசியல்பு.

அண்டசரா சரங்களெலாம் ஆதரவாக்
காத்தருளல் அரிய ஆற்றல்
கொண்டபரா பரனுக்கே தனியுரிமை;
கோவேந்தர் என்பார் ஈண்டிம்
மண்டலத்தைப் புரந்தெங்கும் மனுநீதி
புரிந்துவரின் மகிமை வாய்ந்து
விண்டலமும் புகழ்ந்துவர விமலனருள்
சுரந்துவர விளங்கி நிற்பார்

.(1)