பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/36

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

31


8. தந்தைதாய் பேணல் தனயர்க் கினிய அணி
மைந்தர்க்குக் கல்வியே மாட்சியணி-செந்தமிழை
ஒர்ந்து பயிலல் உணர்வுக் கணிஉயிர்க்கோ :ஆர்ந்தவுயர் சீலம் அணி.

(ஙு)

இ-ள்.

தாய் தந்தையரை உள்ளம் உவந்து போற்றி வருதல் பிள்ளைகளுக்கு அழகு; அந்த மைந்தர்க்குக் கல்வியே நல்ல அழகு: செவ்விய தமிழ் மொழியை ஒர்ந்து பயின்று தேர்ந்துவரின் உணர்வுக்கு அழகு; நிறைந்த ஒழுக்கம் உயிர்க்கு அழகு என்க.

பெற்றோரைப் பேணாத பிள்ளைகள் பிழை படிந்து இழிகின்றனர். கல்வியைக் கல்லாத மக்கள் புல்லராய்ப் புலையுறுகின்றனர். அரிய பல அறிவு நலன்கள் இனிய தமிழ் மொழியில் எவ்வழியும் பெருகியுள்ளன. அந்த உண்மையை உணர்ந்து பயின்று உயர்ந்து கொள்ளாதவர் இழிந்தவராய்க் கழிந்து ஒழிந்து போகின்றனர்.

நீதி முறைகளில் யாதும் வழுவாமல் நெறியே ஒழுகிவருவது ஒழுக்கம் என வந்தது. இந்த ஒழுக்கம் உயிர்க்கு உயிராய் ஒளி மிகச் செய்கிறது. விழுமிய இந்த ஒளியை இழந்தால் அந்த உயிர் பழி படிந்து பாழாயிழிந்து கழிகிறது.

பழி படியாமல் வாழ்வதே விழுமிய வாழ்வாம். வாழ்வு என்பது என்ன? உயிர் உடலோடு கூடி ஒழுகி வருவது. அது விழுமிய நிலைகளைத் தழுவிவரின் இருமையும் பெருமையாய் இன்பமுறுகிறது.