பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/38

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

அணியறுபது

33


கற்கும் தெளிவான கல்வியாய் ஒளி தருதலால் கல்லாதவரும் இதனால் நல்ல பலனை அடைகின்றனர்.

கல்லாரே ஆயினும் கற்றாரைச் சேர்ந்தொழுகின்
நல்லறிவு நாளும் தலைப்படுவர்-தொல்சிறப்பின்
ஒண்ணிறப் பாதிரிப்பூச் சேர்தலால் புத்தோடு
தண்ணீர்க்குத் தான்பயந் தாங்கு.

(நாலடியார்139)

பாதிரிப் பூவைச் சேர்ந்த மண்பானைத் தண்ணீரும் நல்ல மணம் பெறும்; அது போல் கல்லாதவரும் நல்லவரைச் சேர்ந்து ஒழுகின் அவர் கூறும் அறிவுரைகளைக் கேட்டு உயர்வுறுவர் என இது உணர்த்தியுளது. நல்லவர் வாய்மொழி நலம்பல தருகிறது.

எனைத்தானும் நல்லவை கேட்க அனைத்தானும் ஆன்ற பெருமை தரும்.(குறள் 416)

கேள்வியால் எவ்வளவு மேன்மைகள் விளைந்து வரும் என்பதை இதனால் அறிந்து கொள்கிறோம். கல்லாதவரையும் கற்றவராக உயர்த்தி யருளுதலால் கேள்வி அவர்க்கு நல்ல அணி என வந்தது.

தாய் தந்தையர்க்குப் பணிபுரிவதே சேயர்க்கு அணி என்றது அதனால் அவர் மாண்புறுதல் கருதி. தக்க நன்றியறிவுடன் ஈன்றோர்க்கு மக்கள் இதம் புரிந்து வரும் அளவே சான்றோர் என வான் தோய் புகழுடன் அவர் விளங்கி வருவர். தம்மை மக்கள் எனப் பெற்றவர் மனம் மகிழ்ந்து வரப் பணி புரியாது ஒழியின் மாக்கள் என அவர் இழிய நேர்கின்றார். தாயரின் பணியே சேயரின் அணி.

5