பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/6

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.
௳
முகவுரை



ழகு எவரையும் உவகையுறச் செய்கிறது. எல்லாரும் யாண்டும் அழகை விழைந்து வியந்து உவந்து காண்கின்றனர். காதுக்கு இசைபோல் கண்ணுக்கு அழகு நசையை ஊட்டி விடுகிறது.

உருவக் காட்சியில் மருவி வருகிற இனிய பொலிவையே அழகுஎன அறிந்து மனிதர் மகிழ்ந்து வருகின்றனர். இளமை நலம் வளமையாய் வளர்ந்து வரும் அளவு அழகு அங்கே கிழமையாய்க் கிளர்ந்து தெளிவாத் துலங்கி வருகிறது.

காந்தம் இரும்பைக் கவர்ந்து கொள்ளுவதுபோல் மாந்தரை அழகு விரைந்து கவர்ந்து கொள்கிறது.

எழில் ஏர் கவின் குழகு கோலம் சொக்கு நோக்கு யாணர் சாயல் வனப்பு வண்ணம் என இன்னவாறு அழகுக்கு ஐம்பது பெயர்கள் தோன்றியுள்ளன. யாவும் காரணக் குறிகள் உடையன. கருதி யுணர்பவர் எவரும் காரணங்களைப் பூரணமாகத் தெரிந்து தெளிந்து வியந்து கொள்கின்றன்ர்.

அதிசய அழகன் எனக் கடவுளையே அழகு மொழிகளால் துதிசெய்து வருகின்றனர்: "விடை மேல் அழகர்: மதிசூடும் எழிலர்: சொக்கேசர்; அழகேசர்” என ஈசனை இவ்வாறு போற்றியுள்ளனர்.