பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/7

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

2

முகவுரை


செவ்வேள் என்பது முருகப்பெருமானுக்கு உரிமையாய் அமைந்துள்ள பேர். சிவந்த சோதித் திருமேனியும், என்றும் மாருத இனிய இளமையும், இணையேதும் இல்லாத பேரெழிலும் உடையவன் ஆதலால் இவ்வாறு அப்பெருமானுக்குப் பெயர் இயைந்து பெருமை பெற்றுளது. வேள் என்னும் சொல் விருப்பம்: விழைவு என்னும் பொருள்களையுடையது.வேள்=மன்மதன். அவ்வேளும் விழைந்து எவ்வேளையும் வியந்து நோக்கும் அழகன் என்பது செவ்வேள் என்னும் பெயரால் தெரிய நின்றது.

ஆயிரம் கோடி காமர் அழகெலாம்
திரண்டு ஒன்றாகி
மேயின எனினும் சேவ்வேள் விமலமாம்
சரணம் தன்னில்
தூயநல் எழிலுக்கு ஆற்றது; என்றிடின்,
இனைய தொல்லோன்
மாயிரு வடிவிற் கெல்லாம் உவமையார்
வகுக்க வல்லார்?

(கந்தபுராணம்)

முருகப்பெருமானது அற்புத அழகைக் குறித்து வந்துள்ள இதனை இங்கே ஒர்ந்து உணர்ந்து உண்மையைத் தேர்ந்து கொள்ள வேண்டும்.

உலகப் பிறப்புகள் எவற்றினும் மனிதப் பிறப்பு பெறுதற்கு அரியது. அவ்வாறு பெற்றுவரினும் அழகிய உருவங்களை உற்று வருதல் மிகவும் அரிது. உருவ அழகை மருவி வருவது அரிய புண்ணியப் பேருய்ப் பெருகி யுளது.

உருவு திருவூட்டும் என்பது முதுமொழி.