பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/79

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

74

அணியறுபது


மதிப்பும் மாண்பும் மருவி எவ்வழியும் மகிம்மையுடன் மனிதன் இன்பமாய் இனிது வாழ வுரிய மருமத்தை இதில் கூர்ந்து ஓர்ந்து கொள்கின்றோம்.

கீழ்மை யுறாமல் வாழ்ந்து வருபவரே மேலோராய்த் தேர்ந்து வருகிறார். உயர்வும் தாழ்வும் வெளியிலிருந்து வருவன அல்ல; அவனவனுடைய செயல்களிலேயே இனமாய்ச் செறிந்துள்ளன.

கீழோர் மேலோர் எனப் பால் வேறுபடப் பாகுபாடுகள் செய்து வருவன எல்லாம் காரண காரியங்களோடே பூரணமாய்த் தொடர்ந்து வருகின்றன.

இனிமையும் இதமும் புனிதமும் பொருந்திவரின் அந்த மனிதன் மேலான குலமகனாய் விளங்கி வருகிறான். கொடுமையும் மடமையும் தீமையும் கூடிவரின் அவன் கீழான இழிமகனாய்க் கழிந்து போகிறான். பான்மை உயர மேன்மை உயரும்.

இழிந்த இயல்புடைய மனிதன் இழிவாகவே எண்ணுகிறான்: ஈனமாகவே பேசுகிறான் இடர்களேயே செய்கிறான். சொல் செயல்கள் எல்லாம் நஞ்சு தோய்ந்து வருதலால் அவன் நெஞ்சம் பிழையாய் இழிகிறது; இழியவே சேயை அவன் நாசமே அடைகிறான்.

மண்ணுலகில் வாழுகின்ற மானிடர்களின் நிலைகளை அறிய விரும்பி விண்ணுலக வேந்தனுன இந்திரன் ஒருமுறை மனித உருவம் மருவி இப் பூமிக்கு வந்தான். எங்கும் தீமையும் கீழ்மையும் சிறுமையும் மடமையுமே நிறைந்துள்ள மனிதர்களையேக் கண்டான். மகவான் மிகவும் வருந்தி நெஞ்சம் கலங்கினான்.