பக்கம்:அணியறுபது, செகவீரபாண்டியன்.pdf/80

இப்பக்கம் சரிபார்க்கப்பட்டது.

அணியறுபது

75


பெரிய நகரங்களுக்கும் வந்தான்; பல வீதிகளிலும் நடந்து பார்த்தான். யாரைப் பாாத்தாலும் அருவருப்பும் வெறுப்பும் அடைந்தான். வழியிடையே ஒரு நாய் எச்சில் இலையை நக்கிக் கொண்டிருந்தது: அதனைக் கண்டதும் வியந்து நின்றான். நிலையான அந்த நாயின் பரிதாப நிலைக்கு இரங்கி நெருங்கி நோக்கினான். நெருங்கவே அது உறுமி உறுமி விரைந்து எச்சிலை நக்கியது. ஏன் அது அவ்வாறு உறுமியது? "இந்த எச்சில் இலையில் உள்ளதை நக்கியே இவன் இவ்வாறு நெருங்குகிறான்" என்றே அவ்வாறு அது உறுமியது என்று தெரிந்து அமரர் கோன் அதிசயமடைந்து உலக நிலையை வியந்தான்.

அயலே நடந்து போனான்; மனிதர்களும் அவ்வாறே யாண்டும் மையல் மயக்கங்களே பூண்டுள்ளதைக் கண்டான். உருவங்கள் மாறி உள்ளனவே யன்றி எல்லாரும் பொல்லாத நாய்களே என்று எண்ணி இனணந்து மண்ணினர் நிலைக்கு இரங்கினான்

ஈன நிலையில் இழிந்துள்ளோர் யாரையும்
ஈனமா எண்ணி இகழுவார்-வானவர்கோன்
வந்த தெருவில் வழியில் இழிநாயும்
அந்தோ உறுமியதால்.

இந்த நிலையிலேயே மனிதரும் உள்ளனர் என்று வந்த இந்திரன் சிந்தை தெளிய நேர்ந்தான். மனம் இழிந்து நீசமுறின் மனிதன் இழிந்து நாசம் அடைகின்றான் என்று நெஞ்சம் தெளிந்து கெடிது நொந்து மீண்டு போனான். வானவர்கோன் ஆனவரின் ஈனமான இழி நிலைகள் தெரிய வந்தன.