பக்கம்:அணியும் மணியும்.pdf/106

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

104


9. அவல ஓவியங்கள்


புலவர்கள் எடுத்துச் சொல்லும் பொருள் இன்பப் பொருளாகவே இருக்க வேண்டும் என்பதில்லை. துன்பப் பொருளையும் தம் கவிதைப் பொருளாக்கிச் சுவையூட்டும் இயல்பினர் புலவர். வாழ்க்கையில் ஏற்படும் துன்பங்களைச் சொல்லும்பொழுது அவலச்சுவை தோன்றுமாறு செய்து, அந்த நிகழ்ச்சிகளில் பரிவு உணர்ச்சி உண்டாக்கிவிடுகின்றனர்.

இன்ப வேட்கையில் கொண்டுள்ள ஆர்வத்தைப் போலவே பிறர் துன்பத்தைப் போக்க வேண்டும் என்ற ஆர்வமும் மனிதன்பால் இயல்பாக உள்ளது. அதனால்தான் இலக்கியச் செய்திகளில் துன்பத்தைப் பற்றிச் சொல்லும்பொழுது அத் துன்பத்தில் பங்கு கொண்டு பரிவும் இரக்கமும் பெறுகிருேம். அந்த இரக்க உணர்வு அந்தக் காவிய மாந்தர்களின் வாழ்வோடு ஒன்று படச் செய்து இலக்கியச் சுவையில் ஆழ்த்திவிடுகிறது. இன்பம் ஒரு சிலருக்கே தனியுரிமையாகவும் ஆகலாம். எனினும் துன்பம் உலகத்தின் பொது உடைமையேயாகும். வாழ்க்கையில் துன்பமுறாதவர் இரார் என்பது வாழ்வில் காணும் உண்மையாகும்.

பொதுவாக இன்பம் வரும்பொழுது அதற்குக் காரணமான நிகழ்ச்சிகள் எதிர்பாராமல் ஒன்று சேர்வதில்லை. மெல்ல மெல்ல மனம் அதற்கு வேண்டிய அடிப்படைகளைப் பெற்றுத் தன்னைச் சூழ்நிலைக்கேற்றவாறு சரிப்படுத்திக் கொள்கிறது. துன்பம் எதிர்பாராமல் சில சமயங்களில் ஏற்பட்டுவிடுவதால்