பக்கம்:அணியும் மணியும்.pdf/112

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

110

ஊர்தி தானே மண்ணில் இறங்கி விடுகிறது. அவள் மூர்ச்சித்துச் செயலற்றுவிட்டதால் அவ்வூர்தியும் பறத்தல் அற்றுத் தானே கீழே இறங்கிவிடுகிறது. இறங்கிய அந்த இடம் இடுகாடாக இருக்கிறது.

கருவுற்றிருந்த விசயமாதேவி அந்த இடுகாட்டில் நடுஇரவில் நன்மகனைப் பெறுகிறாள். அந்த நிலையில் தான் முன்னிருந்த உயர்நிலையையும் அப்பொழுது இருக்கும் தனிமை நிலையையும் எண்ணிப் பார்த்து வேறுபாட்டைக் காண்கிறாள். இந்த மாற்றம் அவளுக்கு ஆற்றொணாத் துன்பத்தை அளிக்கிறது. கண் திறந்து பாராத அப் பச்சிளங் குழவியைப் பார்த்து, “இந்தச் சூழ்நிலையிலா நீ பிறக்க வேண்டும்?” என்று கூறும் அவள் சொற்கள் நெஞ்சுருகச் செய்கின்றன. “நீ பிறக்க வேண்டிய இடமா இது?” என்று கேட்கிறாள். “தாதியர் சூழ மங்கலம் முழங்க மன்னவனின் அரண்மனையில் பிறக்கவேண்டிய நீ, பேய்கள் சூழ நரிகள் ஊளை இடும் இடுகாட்டிலா பிறக்க வேண்டும்?” என்று கேட்கிறாள். “மன்னனின் அரண்மனையாக இச் சுடுகாடு அமைந்துவிட்டது. முழவுக்கு மாருக நரிகளின் ஊளையிடும் ஒலி முழங்குகிறது. ஈம நெருப்பின் ஒளியே விளக்காகவும் இடுகாடே உயர் அரங்காகவும் அமையப்பேய் அசைந்து ஆடக் கோட்டான் குழறிப் பாராட்ட, இத்தகைய சூழலிலேயா நீ பிறக்க வேண்டும்?” என்று மனமுருகக் கூறுகிறான். “அரங்கிலே மகளிர் ஆட அருகிருந்து தாதியர் தாலாட்டுப் பாட மகவு பிறந்த மகிழ்ச்சியில் மன்னவன் மகிழப் பிறக்க வேண்டிய நீ இங்கு இடுகாட்டில் நடு இரவில் நரியின் ஊளையிடும் ஓலத்தையும் பேயாட்டத்தையும் கோட்டானின் கூக்குரலையும் கேட்கும் பயங்கரமான இடத்தில் இனிமை இழந்த தனிமையிலா பிறக்க வேண்டும்?” என்று கேட்பது, வாழ்வில் ஏற்பட்ட தாழ்வை எண்ணிப்பார்த்து நிலை கெட்டமைக்கு அலைவுறும் நிலையைக் காட்டுகிறது.

வெவ்வாய் ஒரி முழவாக விளிந்தார் ஈமம் விளக்காக
ஒவ்வாச் சுடுகாட் டுயரரங்கில் நிழல்போல் நுடங்கிப் பேயாட