பக்கம்:அணியும் மணியும்.pdf/114

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

112

இவ்வாறு, இழவாலும் வாழ்க்கைநிலை மாறுவதாலும் துன்பம் பிறத்தல் இயல்பாகும். இத்தகைய துன்ப வாழ்வு எதிர்பாராமல் நிகழ்வதாகும். இவ்வாறு இல்லாமல் பலருடைய துயரத்திற்குக் காரணமாக அமைவது வறுமையாகும். இல்லை என்பதால் வரும் தொல்லைகள் மனிதருடைய வாழ்வில் இன்பமும் மதிப்பும் இல்லாமல் செய்து விடுகின்றன.

இத்தகைய வறுமையால் உண்டாகும் துயரம் நாள்தோறும் வளர்ந்து நலிவையும் மெலிவையும் ஈந்து வாழ்வில் தலையெடுக்க ஒட்டாமற் செய்துவிடுகிறது. அத் துன்பம் புலவர்களின் வாழ்விலே சொந்த அனுபவமாகவும் அமைந்துவிடுகின்ற காரணத்தால், அஃது இன்னும் சிறப்பாகக் கூறப்படுகிறது.

சில புலவர்களின் வாழ்வில் இவ்வறுமை குடி புகுந்து அவர்கள் குடும்பத்தைச் சுவை பார்த்து அவர்கள் வாழ்வைச் சுவையற்றதாக ஆக்கிவிட்டது. வறுமையின் கொடுமையை நன்குணர்ந்த பெருஞ்சித்திரனார் தீட்டிக் காட்டும் அவர் வீட்டுவாழ்வு புறநானூற்றில் ஒரு பெருஞ் சித்திரமாகவே அமைந்து விடுகிறது.

அடுப்பில் அடுதல் செய்து பலநாள் ஆகின்றன. சாம்பல் விழாத காரணத்தால் அடுப்பு ஆழமாகத் தோன்றுகிறது. அதன் பக்கங்கள் உயர்ந்து விளங்குகின்றன. சூடு படாததால் அடுப்புக் குளிர்ச்சி அடைந்து விடுகிறது. அக்குளிர்ச்சியால் காளான் பூத்துக் குலுங்குகிறது. அவர்கள் வாழ்வு மட்டிலா வறுமையால் கலங்குகிறது. கைக்குழந்தையோ பால் குடிக்க அவாவுகிறது. பசியால் அலந்து மெலிந்து கிடப்பதால் தாய் குழந்தைக்குப் பால் ஊட்ட முடியவில்லை. பாலின்மையால் சுவைத்துப் பார்த்துச் சலித்துவிட்ட குழந்தை அழத் தொடங்குகிறது. அழும் குழந்தையை ஆற்ற ஆற்றலிழந்தவளாய்க் கண் நிறைய நீர் கொண்டு அவள் கலங்கி நிற்கிறாள். புலவர் உள்ளம் மிகவும்