பக்கம்:அணியும் மணியும்.pdf/115

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

113

மென்மையானது என்பதை நன்குணர்ந்த அவள் தன் கணவனைக் கடிந்து ஏதும் கூறியதாகத் தெரியவில்லை. சொல்லும் சொற்களைவிடக் கலுழும் கண்ணீருக்கு ஆற்றல் மிகுதியாகிறது; அழகிய பாடல் எழக் காரணமாகிறது. அக்கண்ணீர் அக்கலைஞரின் இதயத்தைக் கலக்கி, ஒரு சித்திரமாக வடித்துக் காட்டக்காரணமாக அமைகிறது.

ஆடுநனி மறந்த கோடுயர் அடுப்பின்
ஆமபி பூப்பத் தேம்புபசி உழவாப்
பாஅல் இன்மையின் தோலொடு திரங்கி
இல்லி தூர்ந்த பொல்ல வறுமுலை
சுவைத்தொறு அழுஉந்தன மகத்துமுக நோக்கி
நீரொடு நிறைந்த ஈரிதழ் மழைக்கண்என்

மனையோள் எவ்வம்
- புறம். 164-1-7

என்று அவள் உழந்த துன்பத்தை எடுத்துக் காட்டுகிறார்.

மேலும் இத் துன்பக் காட்சி அவர் பாடும் மற்றொரு பாடலால் செறிவு பெறுகிறது. பசியின் கொடுமையால் எதையாவது உண்டுதானே ஆக வேண்டும். குப்பைக் கீரை கொய்து கொய்து அவையும் தட்டையாகிவிடுகின்றன. அவை மீண்டும் முளைக்கும் தோறும் களைந்து கொண்டுவந்து உப்பும் இல்லாமல் நீரில் வேகவைத்து மோரும் இன்றிக்கீரைமட்டும் உண்டு சோறு மறந்த வாழும் வாழ்வைக் காட்டுகிறார்.

குப்பைக் கீரை கொய்துகண் அகைத்த
முற்றா இளந்தளிர் கொய்துகொண்டு உப்பின்று
நீர்உலை யாக ஏற்றி மோரின்றுமிசைந்து
அவிழ்ப்பதம் மறந்து பாசடகு மிசைந்து
மாசொடு குறைந்த உடுக்கையள் - புறம். 159

என்று இப்பாடலில் அவள் உண்ட எளிய உணவையும், கொண்ட மாசு படிந்த உடையையும் காட்டுகின்றார். அந்த