பக்கம்:அணியும் மணியும்.pdf/116

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

114

நிலையிலும் அவள் அறத்தைப் பழிக்காமல் தன் கணவனை விரும்பும் உயரிய நிலையை, ‘அறம் பழியாத் துவ்வாளாகிய என் வெய்யோள்’ என்று கூறிச் சிறப்பிக்கின்றார்.

வாழ்க்கையில் மற்றைய குறைகளை வாய்விட்டுக் கூறமுடிகிறது. ஆனால் வறுமையைப் பற்றி மட்டும் வாய்விட்டுக் கூற முடியாமல் உள்ளுக்குள்ளே விழுங்கி வாடுவது இயல்பாக உள்ளது. வறுமையால் வாடும் நிலையை வாய்விட்டுச் சொன்னால் மனிதரின் மானம் குறைகிறது. அதனால் வயிற்றுக்கு உணவு இல்லையென்றாலும் வாய்விட்டுக் கூற மானமுள்ள மக்களால் இயல்வதில்லை.

கிணைமகள் ஒருத்தியின் பசியைக் காட்டும் சிறுபாணாற்றுப்படை, எளிய உணவை உண்டால் பிறர் எள்ளி நகையாடும் மடமை உலகில் உள்ளது என்பதால், அவள் அட்ட எளிய உணவைக் கதவையடைத்துப் பிறர் காணாதவாறு சுற்றத்திற்குப் படைத்துத் தானும் உண்ணும் காட்சியைக் காட்டுகிறது.

ஒல்குபசி உழந்த ஒடுங்குநுண் மருங்குல்
வளைக்கைக் கிணைமகள் வள்ளுகிர்க் குறைத்த
குப்பை வேளை உப்பிலி வெந்ததை
மடவோர் காட்சி நாணிக் கடையடைத்து
இரும்பேர் ஒக்கலொடு ஒருங்குடன் மிசையும்

அழிபசி வருத்தம் வீட
-சிறுபாண்; 135-140

என்று அவள் பசியை வீழ்த்தும் அழகிய காட்சியைக் காட்டுகின்றது. எளிய உணவை உண்பதை இகழும் அறியாமை உலகில் உள்ளது என்பதை உணர்ந்த இணைமகள் கதவை அடைந்து உணவு பரிமாறி உண்கின்றாள். வறுமையை வாழ்வின் குறையாக எண்ணி ஏழைகளை மதிக்காதவர்களைக் குறிப்பாக ‘மடவோர்’ என்று பாடல் குறிப்பிடுகின்றது.