116
கொடுமையைக் காட்டும் சித்திரங்களாக அமைகின்றனர். அந்த அளவில் இரண்டு பாடல்களிலும் கருத்து ஒற்றுமை காணப்படுகின்றது. பசி என்றால் அது குழந்தையைத் தாக்கும் பொழுதுதான் மிகுதியாக உணரப்படுகிறது என்பதை இப்புலவர்கள் காட்டியுள்ளனர்.
வாழ்வில் நெருங்கிய உறவினரையும் நண்பினரையும் இழப்பதாலும், உயரிய வாழ்வு தீர்ந்து நலிவு அடைவதாலும், வறுமை வந்து அடைகிறது. அவ் வறுமையால் வாழ்க்கையில் மற்றவர்களின் மதிப்பை இழக்கக் கூடிய தாழ்வு ஏற்பட்டு விடுகிறது. இத்தகைய தாழ்வினை ‘இளிவு’ என்பர். இந்த இளிவுக்கு அஞ்சித்தான் கிணைமகள் மடவோர் காட்சிக்கு நாணிக் கதவடைத்து உணவு உண்டதாகக் கூறப்படுகிறது.
வாழ்வில் அவலம் ஏற்படுவதற்கு இழவு, நிலை கெடல், வறுமை, இளிவு ஆகிய இந் நான்கே பொதுவாகக் காரணமாகின்றன. நிலைகெடல் என்பதை ஆசிரியர் தொல்காப்பியனார் ‘அசைவு’ என்று குறிப்பிடுவர். தொல்காப்பியத்தின் பொருளதிகாரத்தில் மெய்ப்பாடுகளைப் பற்றி விளக்கும் ஆசிரியர் தொல்காப்பியனார்,
இளிவே இழவே அசைவே வறுமையென
விளிவில் கொள்கை அழுகை நான்கே - சூ. 253
என்று அழுகை தோன்றுவதற்கு இந் நான்கு காரணங்களைக் கூறுகின்றார். இந் நான்கு பொருள்பற்றி அழுகை பிறப்பதைத் தமிழிலக்கியம் பல ஓவியங்களாகக் காட்டியுள்ளது.
இந்த அழுகைச்சுவையை ஓவியமாகத் தீட்டும் பொழுது அஃது அழகுணர்ச்சியையும் தருகிறது. இலக்கியத்தில் அழகுணர்வு தரும் இந் நிகழ்ச்சிகள் வாழ்க்கையில் அழுகையை உண்டாக்கி விடுகின்றன. வாழ்க்கையின் அழுகை ஓலங்களை இலக்கியத்தில் அவல ஓவியங்களாகப் புலவர்கள் தீட்டிவிடு