பக்கம்:அணியும் மணியும்.pdf/13

இப்பக்கம் மெய்ப்பு பார்க்கப்பட்டுள்ளது

11

சொற்களை அமைத்து அரிய பெரிய கருத்துக்களை உணர்த்தும் பெற்றி இந்நூலில் யாண்டும் காணலாம்.

பாவின் அடியும், சீரும், சொல்லும், சுருங்கி அமைந்திருப்பதோடு, அவர் எடுத்தாண்டுள்ள சொற்களின் எண்ணிக்கையிலும் சுருக்கம் அமைந்திருக்கக் காண்கின்றோம். ஏழு சீர் கொண்ட திருக்குறளில், மிகச் சுருங்கிய எண்ணிக்கை கொண்ட சொற்களை மீண்டும் மீண்டும் வருமாறு அமைத்து, அவர் சொற்றிறனின் பெருமையை நிலைநாட்டிவிட்டார் என்று கூறலாம். ஒரு குறளில் மூன்றே சொற்களை எடுத்தாண்டுள்ள இடங்கள் பல உள்ளன. துப்பு' 'மழை', 'ஆதல்' என்ற மூன்று சொற்களைக் கொண்டே எழுசீர்களைக் கொண்ட பாவினை அமைத்து, விண்ணையும் மண்ணையும் தொடர்புபடுத்தி, மண்ணில் வாழும் உயிரையும் உயிர்க்கு உணவாகிய மழையையும் பற்றி அரிய செய்தியைத் தெரிவித்திருக்கின்றார்: அக் குறட்பாவின் பெருமைக்கு நிகர் அவர் பாக்களே எனலாம்.

துப்பார்க்குத் துப்பாய துப்பாக்கித் துப்பார்க்குத்
துப்பாய தூஉ மழை – 12

இக் குறட்பாவில் அவர் எடுத்தாண்டுள்ள சொற்கள் துப்பு', 'மழை', 'ஆதல்' என்பவையேயாகும். இதைப் போலவே,

குன்றின் அனையாரும் குன்றுவர் குன்றுவ
குன்றி யனைய செயின் – 365

என்ற பாவும்,

செல்வத்துட் செல்வம் செவிச்செல்வம்
அச்செல்வம் செல்வத்துள் எல்லாம் தலை – 411

என்ற பாவும், எண்ணிக்கையில் குறைந்த சொற்களைக் கொண்டு அவை மீண்டும் வருமாறு அமைந்திருக்கின்றன. இவ்வாறு வருதல், சொற் சுருக்கம் என்ற சிறப்போடு ஒரு தனி அழகையும்,