23
"அறம் உன்னைத் தலையெடுக்க ஒட்டாது" என்று அறிவுறுத்துகிறது. கூனிக்குச் சொல்லும் மாற்றத்தில் அவள் உள்ளத்தில் ஏற்படும் மாற்றம் மெல்ல வெளிப்படுகிறது. நன்மையில் பழகிப்போன அவள் நெஞ்சு திடீரென்று தீமையில் இறங்க மறுக்கிறது. நன்மையழிந்து தீமை வாழ மனச்சான்று இடங்கொடுக்க மறுக்கிறது.
கூனி சொல்வன கேட்பதற்கு இனிமையாக இருக்கின்றன வேயன்றித் தன்னலத்துக்குப் பயன்படா என்றும், பயன் பட்டாலும் அவற்றைச் செயலில் காணமுடியாது என்றும் தெரிவிக்கின்றாள். மனத்துக்கு நல்லனவெனினும் செயலில் காணமுடியாது என்ற எண்ணத்தை வெளிப்படுத்துகிறாள். அதே சமயத்தில் அறம் நோக்கின் அறத்திற்கும் நல்லவையல்ல என்று கூறும்பொழுது, நன்மையில் பழக்கப்பட் அவள் மனச்சான்று தீமையில் செல்லத் தயங்குவதையும் குறிப்பிடுகிறாள்
எனக்கு நல்லையும் அல்லைநீ என்மகன் பரதன்
தனக்கு நல்லையும் அல்லையத் தருமமே நோக்கின்
உனக்கு நல்லையும் அல்லைவந் தூழ்வினை தூண்ட
மனக்கு நல்லன சொல்லினை மதியிலா மனத்தோய்
-164
என்று அவள் கூறியவை மனத்துக்கு இனியனவேயன்றி நலத்துக்கு இனியன அல்ல என்று கட்டிக் காட்டுகின்றாள். இதை மற்றவர்கள் அறிந்தால் அவர்கள் வாழ்வு என்ன ஆகுமே என்ற அச்சத்தால் நலன் அல்லன அவள் சொல்லுவதாகக் கருதுகிறாள். இது வரையிலும் அவளைப் பழக்கிப் புகழையும் பண்பையும் ஈந்த அறம் அவளை இவ்வாறு பேசவைக்கிறது. இறுதியில், அறமும், அதனால் வளரும் புகழும், பண்பும் தன்னலத்தின் முன்பு தலைசாய்ந்து விடுகின்றன என்பது, இனி அவள் தொடர்ந்து பேசும் பேச்சால் புலப்படுகிறது.